Home

சேலத்தில் கவிதைத் திருவிழா

சிபிச்செல்வன்

மார்ச் 4 ஆம் தேதி சேலத்தில் கவிதைத் திருவிழா நடைபெறும் என்று முகப்புத்தகத்தில் நண்பர்கள் போட்டுக்கொள்வதற்கும் முன்பே இரண்டு மாதங்களாக வே.பாவு இந்தக் கவிதைத் திருவிழா நடத்தவதற்கான திட்டடமிடலைத் தொடங்கி விட்டார்.

திருவிழா என்றால் உடனே தொடங்கி உடனே முடிந்துவிடுமா ?. அதுவும் கவிதைத் திருவிழா. திருவிழாவிற்குக் கோவை,, சென்னை, மதுரை, நாகை, கும்பகோணம் ஓசூர் (கொஞ்சம் கூட்டம் அதிகம் ) திண்டுக்கல் போன்ற ஊர்களிலிருந்து கவிஞர்களும்., விமர்சகர்களும், படைப்பாளிகளும் பங்குபெற சனிக்கிழமை மதியம் தொடங்கி ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள்.

இரவு முழுவதும் கவிதை குறித்து விரிவாக விவாதங்கள் தொடங்கி விடிய விடிய ( வடிய வடிய  என்று யாராவது படித்தாலும் சரிதான்.)   பேச்சு களை கட்டியது.

ஞாயிற்றுக் கிழமை முறைப்படி கவிதைத்திருவிழா தொடங்கியது காலை 11 மணியளவில். தொடங்கி வைத்தவர் தக்கை அமைப்பாளரில் ஒருவரான வே.பாபு. அதைத்  தொடர்ந்து நெறியாள்கை செய்தவர் சிபிச்செல்வன்.

முதல் கவிதைத் தொகுதியாக இசையின் சிவாஜி கணேசனின் முத்தங்கள் புத்தகத்திற்கான விமர்சனங்களைச் செய்ய வந்தவர் கவிஞர் ஸ்ரீநேசன், அவரைத் தொடர்ந்து பா.வெங்கடேசன் கட்டுரைகயைப் படித்தார்.

இரண்டாவது புத்தகமாக இளங்கோ கிருஷ்ணனின் பட்சியன் சரிதம் கவிதைப் புத்தகத்திற்காக யவனிகா ஸ்ரீராமும்,அய்யப்ப மாதவனும் கட்டுரை வாசித்தார்கள்.

மூன்றாவது நுலாக ச.முத்துவேலின் மரங்கொத்தி சிரிப்பிற்குப் பத்மபாரதி கட்டுரை வாசித்தார்.

மதிய வேளை நெருங்கி விட்டதால் உணவிற்கான இடைவேளை அறிவிக்கப்பட்டது. விழா ஏற்பாட்டாளர்கள் அங்கேயே ஏற்பாடு செய்திருந்த உணவை உண்டு விட்டு அனைவரும் களைப்பாறினார்கள்.

நான்காவதாக வெய்யிலின் குற்றத்தின் நறுமணம் புத்தகத்திற்கு லிபி ஆரண்யா தன் கட்டுரையை வாசித்தார்.

அய்யப்ப மாதவனின் ஆப்பிளுக்குள் ஓடும் ரயில் தொகுப்பிற்காகத் தன் கட்டுரையை செல்மா பிரியதர்ஷ்ன் வாசித்தார்.உண்ட களைப்பில் உறங்கியவர்களைத் தட்டி எழுப்பியது கட்டுரை

சபரிநாதனின் களம் காலம் ஆட்டம் தொகுதிக்கான  கட்டுரையைக் குலசேகரன் வாசித்த்தார். இடையில் கொஞ்சம் கவிதை குறித்த விவாதங்களைக் கிளப்பினார்கள் மூத்த கவிஞரான பா.வெங்கடேசனும் யவனிகா ஸ்ரீராமும் . அவர்களோடு ஸ்ரீநேசனும் .இளங்கோ கிருஷ்ணனும் விவாதித்தார்கள். இவர்களோடு மூத்த கவிஞரான ஆதவன் தீட்சண்யாவும் நெறியாள்கை செய்த நாட்டாமை சிபிச்செல்வனும் பங்கேற்றார்கள்.

இது நடப்பதற்குக் கொஞ்சம் முந்திதான் நெறியாளுநர் சிபி இதுபோன்ற ஒரு லைவ்வான கூட்டத்தைப் பார்த்ததில்லை எனக் கூறியிருந்தார். அதற்கு உடனே ஆதவன் தீட்சண்யாவிடமிருந்து நாட்டாமை உங்கள் இடைக்கால தீர்ப்பை இப்போதே சொல்ல வேண்டாம் என்று கிண்டல் செய்ய மொத்த கூட்டமும் ஆரவாரம் செய்தார்கள். அதாவது கூட்டத்தில் அதுவரையிலும் யார் விமர்சனம் செய்தாலும் அதை ஒரு ஆரோக்கியமான விவாதமாக மாற்றிக் கொண்டிருந்தார்கள். குரல்கள் காரசாரமாக உயராமல் சரியான போக்கில்  விவாதங்கள் ஆரோக்கியமாச் சென்று கொண்டிருந்தது.

கடந்த இருபது வருடங்களாக நானும் இதுபோன்ற பல இலக்கிய கூட்டங்களில் பங்கெடுத்து வருகின்றவன்.  இதுபோல ஒரு கூட்டம் அமையவில்லை என்ற அர்த்தத்தில்தான் அப்படி ஒரு கருத்தை உணர்ச்சிவசப்பட்டு உதிர்த்தேன்.

அது கொஞ்சம் அதிகம்தான் என்பதை சபரிநாதனின் தொகுப்பிற்கான விமர்சனத்தின்போது உணர முடிந்தது. அதாவது உரையாடல்கள் கவிதை குறித்த பொதுவான விவாதாமாக மாறியதும் கொஞ்சம் காரசாரம் கூடியது.

இறுதியாக ஆதவன் தீட்சண்யாவின் கவிதைத் தொகுப்பிற்கான தன் விரிவான கட்டுரையை (தன் அரசியல் சார்புடன் கூடிய விரிவான விமர்சன கட்டுரையை ) வாசித்தார் விஷ்ணுபுரம் சரவணன்.

இந்தக் கட்டுரைதான் இறுதியானது என்பதாலும் கொஞ்சம் கூடுதாலாக நேரம் இருந்ததாலும், ஆதவனின் கவிதைகள் பேசிய விஷயங்கள் கொஞ்சம் முக்கியமானதாகவும், தமிழில் எழுதப்படும்  அரசியல் கவிதைகளில் முக்கியமானதவை என்பதாலும் அவற்றைப் பற்றிய விரிவான விவாதங்கள் நடைபெற்றது. .

இந்த விழா முடிவடைவதற்குள் பல நண்பர்கள் தங்கள் முகப்புத்தகத்தில் போட்டோக்கள் போட்டு கொண்டாடி விட்டனர்.

வழக்கம்போலவே கவிதை கூட்டம் முடிந்ததும் கூட்டம் முடிந்ததாக அர்த்தம் இல்லை. இதுவேறு கவிதைத் திருவிழா என்று ஆரம்பத்திலேயே சென்னேன் இல்லையா. அதற்கேற்ப கவிதைத்திருவிழா முடிந்த அன்று இரவிலும் திருவிழாவிற்கான உற்சாகம் நண்பர்களிடம் விடிய விடிய தென்பட்டது. சிலர் உடனே ஊருக்குக் கிளம்பிவிட்டார்கள், பலர் அங்கேயே தங்களின் உரையாடலைத் தொடர்ந்தனர். இன்னும் கொஞ்சம் பேர் பேஸ்புக்கில் தங்கள் விழா போட்டோக்களை இட்டு நிரப்பினர்.

மொத்தத்தில் இதுபோன்ற கவிதைத்திருவிழா ஒவ்வொரு  ஊரிலும் நடைபெற வேண்டும் என்ற ஆசையை இந்தக் கூட்டமும் தொடங்கி வைத்திருந்தது, அதன் சப்தம் வெளியெங்கும் பரவி இன்னும் அதிர்ந்துகொண்டேயிருக்கிறது,

அப்படி ஒரு முயற்சியின் விளைவாகதான் இந்தப் பதிவும் செய்திருக்கிறது, மின் யுகத்தில் இவ்வளவு காலம் தாழ்த்தி செய்கிறார் இந்தப் பதிவாளர். அவரின் ஞபாகத்திலிருந்தவற்றை வைத்து வெளியில் போட்டுவைத்திருக்கிறார்.அவ்வளவே. ஆனால் சேலம் கவிதைத் திருவிழா எழுப்பியிருக்கும் அதிர்வலைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ்நாட்டு கவிதை வெளியைத் தாண்டி பல்வேறு ஊடகங்களின் வழியாக உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது… எனக் கூறுவது நிச்சயம் கவிதை போலவே உண்மை. உண்மை… உண்மை அது கவிதை போல சர்வ நிச்சயமாக உண்மை.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s