Home

 

வலசை தமிழ் இலக்கிய காலண்டிதழ்

சிபிச்செல்வன்

தமிழில் எழுத்து காலத்திலிருந்து பல்வேறு சிற்றிதழ்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் வெளிவந்திருக்கின்றன, சில இதழ்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக வந்து  அந்த  நோக்கமோ அல்லது அவர்களின் பொருளாதாரம் சீர்குலைந்ததாலோ நின்றுபோய்விடும்,. அதுதான் தமிழ் சிறுபத்திரிக்கைகளின் மரபும்கூட.

ஆங்கிலத்தில் லிட்டில் மேகசைன் என்றொரு இலக்கிய இதழ் டெல்லியிலிருந்து வந்து கொண்டிருக்கின்றது, அவற்றில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை எடுத்துக்கொண்டு விரிவான கட்டுரைகளும் கதைகளும் கவிதைகளும் போடுவார்கள்,. கிட்டத்தட்ட அதேமாதிரி தமிழில் ஒரு புது முயற்சியாக வலசை காலண்டிதழ் தன் இரண்டாவது இதழை வெளியிட்டுள்ளது,

முதல் இதழில் பெண்கள் பற்றிய கட்டுரைகளையும் ,கவிதைகளையும்,மொழிபெயர்ப்பு கவிதைகள் கட்டுரைகள் எனவும் வெளியிட்டு இருந்தார்கள்.

இரண்டாவது இதழில் அரவாணிகள் பற்றிய இதழாக வெளி வந்திருக்கிறது. இதழில் சங்க இலக்கியத்திலிருந்து இன்றைய இலக்கியம் வரை உள்ள அரவாணிகளைப் பற்றிய பதிவுகளின்  ஆவணங்களையும் நாம் மறந்திருந்தாலும் நம் ஞாபகத்திற்கு கொண்டு வரும் பணியைச் செய்திருக்கிறார்கள்.

இவை தவிர ஆங்கிலத்திலிருந்தும் அரவாணிகளைப் பற்றிய கட்டுரைகள், நேர்காணல்கள், கவிதைகள்,சிறுகதைகள் என விரிவாகவே மொழிபெயர்ப்புகளையும் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த நோக்கமும் ஆர்வமும் நிச்சயம் பாரட்ட வேண்டிய விஷயம். இவர்களின் ஆர்வத்தினால் நமது அறிவை விசாலப்படுத்திக் கொள்ளவதற்கான ஒரு வாய்ப்பை நமக்கு வழங்கியுள்ளார்கள் நேசமித்திரனும், கார்த்திகை பாண்டியனும். அவர்களின் பணியை அங்கீகரிக்கும் விதமாகவும் நமது இலக்கிய சேவையை விரிவுபடுத்திக் கொள்ளவும் வலசை இதழ் உதவுகிறது  என்றால் அது மிகையல்ல.

முதல் இதழ் வடிவமைப்பில் கொஞ்சம் போதமைகள் தென்பட்டன. வாசிப்பதற்குக் கொஞ்சம் தடையாக இருக்கும்படியான வடிவமைப்பில் இதழ் இருந்தது. ஆனால் இரண்டாவது இதழில் நல்ல தேர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்பது இதழைப் பார்க்கும்போதே தெரிகிறது.இன்னும் கூடுதலாகச் சொல்ல வேண்டும் என்றால் மிரட்டியிருக்கிறார்கள். இதழைப் பார்த்துக் கொஞ்சமும் மிரளவில்லை என்று யாராவது சொல்வார்களா  என்பது சிறிது சந்தேகம்தான்.

வலசை போன்ற இதழ்கள் தமிழ் இலக்கியத்தின் முகத்தை மாற்றும் வேலையைச் செய்து கொண்டிருக்கிற போது நாம் குறைந்தபட்சம் அவற்றை வாசிக்காமல் இருப்பது எந்தவிதத்திலும் நியாயமாக இருக்காது.

இதுவரை வலசை இதழைப் பார்த்திருக்காதவர்களுக்காகத்தான் அவற்றின் படத்தை இங்கே பிரசுரத்துள்ளேன். என்ன வலசை இதழை உடனே வாங்கி வாசிக்க கிளம்பி விட்டீர்களா நண்பரே….

தொடர்புகளுக்கு

வலசை இலக்கிய காலண்டிதழ்

நேசமித்திரன்

nesamithranonline@gmail.com

1 thoughts on “சிற்றிதழ் அறிமுகம் – வலசை இலக்கிய காலண்டிதழ்

  1. வலசை முதல் சிற்றிதழ் வாசித்தேன். நன்றாக இருந்தது. மொழிபெயர்ப்பு சிற்றிதழ்கள் மற்ற மொழிதெரியாத என்னைப் போன்றவர்களுக்கு பெரிதும் உதவுகின்றன. எனவே, மொழிபெயர்ப்பாளர்களுக்கு நிறைய நன்றி.

பின்னூட்டமொன்றை இடுக