Home

திலிப்குமாரின் ரமாவும் உமாவும் இருபெண்களின் தன்னின காதல் கதை

சிபிச்செல்வன்  

மிகக் குறைவாக எழுதுபவர்களின் பட்டியலில் முன் வரிசையில் இடம்பிடிப்பவர்களில் முதன்மையானவர் தீலிப்குமார், அவரின் மிக நீண்ட இடைவெளிக்குப்பின் இந்தக் கதை தொகுப்பு சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது,.இதை மிக நீண்ட சிறுகதை என்பதா அல்லது குறுநாவல் என்பதா என்ற குழப்பம் நேர்வது தவிர்க்க முடியாது. இதை தீர்ப்பது திலிப் குமாரின் சிறுகுறிப்பு. அக்குறிப்பு இதை குறுநாவல் என்றுதான் கூறுகிறது. அதனால் ரமாவும் உமாவும் குறுநாவலுக்குள் செல்லலாம்.

தமிழில் பெண்களின் படைப்புகள் இப்பொழுதுதான் வெளி வர ஆரம்பித்திருக்கின்றன.,அதனால் அந்தப் பின்னணியில் இந்தப் படைப்பை அணுகுவது சரியாக இருக்கும் என நம்புகிறேன். 2000 ஆம் ஆண்டிற்குபின்தான் பெண் படைப்புகளுக்கான இடம் தமிழில் உருவாகி வருகின்றன, தமிழ்க் கவிதை வெளியில் அவர்கள் குறிப்பிடும்படியான இடத்தைக் கடந்த பத்தாண்டுகளில் பிடித்துள்ளனர்.இலக்கியத்தின் பிற துறைகளிலும் அவர்களின் பங்களிப்பு உருவாகி வருகின்ற நிலை. தமிழகத்தில் பெண்களின் கல்வி நிலை உயர்ந்து வருகிற சூழல்.அவர்களின் அறிவு பல்வேறு துறைகளின் வழியாக விரிவடைவதற்கான சாத்தியங்களை ஆங்கில கல்வியும் , செய்தித்தாள்களும்,உலகத் தொலைக்காட்சி சேனல்களும்,இணைய தளங்களும் வழங்கி வருகின்றன என்பதையும் கவனத்தில் கொண்டு இந்தப் படைப்பை வாசிக்க ஆரம்பித்தால் நாம் பல அதிர்ச்சிகளிலிருந்து தப்பிக்கலாம் கலாச்சார காவலர்கள் கூட இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டால் நல்லது.

தமிழ் இலக்கியத்தில் ஆண்களுக்கான தன்னின காதலை முதன்முதலில் எழுதியவர் கரிச்சான்குஞ்சு( பசித்த மானுடம் நாவல்). அந்த வரிசையில் ஆதவனின் காகித மலர்கள் நாவல்.இப்போது பெண்களுக்கான காலம். திலிப்குமார் இவ்வளவு வருடங்களுக்கு பிறகு முதன்முதலாகப் பெண்களின் தன்னின காதலை எழுதியுள்ளார். இத்தனை பின்னணிகள் இருந்தாலும், மிகவும் ஜாக்கிரதையாக இரண்டு பெண்களை குஜராத்தி சமுகத்திலிருந்துதான் உருவாக்கியுள்ளார் திலிப்குமார்.கடவு என்ற அவரின் சிறுகதையைப் படித்தவர்களுக்கு ரமாவும் உமாவும் குறுநாவலை வாசிப்பது எளிது.

மேலும் திலிப்பின் மன உலகமும் அவரின் படைப்புலகப் பின்னணியையும் எளிதில் உள்வாங்கிக்கொள்ளவும் அவற்றைப் பின்தொடர்ந்து செல்லவும் வசதியாக இருக்கும்,வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் கடவு சிறுகதையின் தொடர்ச்சி அல்லது அதன் சொல்லப்படாத சில பக்கங்களின் கதை வடிவம். ரமாவும் உமாவும் கதையை நீண்ட கதையா அல்லது குறுநாவலா என்பதைவிட இது ஒரு நாடகம் என்று துணிந்து சொல்வதற்கு வசதியாக உரையாடல் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதுவும் கூட இருபெண்களின் நாடக ரீதியான மனோபாவத்தைச் சொல்வதற்காக எழுத்தாளர் திட்டமிட்டு தேர்ந்தெடுத்துக்கொண்ட வடிவமோ என நினைக்கத் தோன்றுகிறது.

புதுவிதமான கதைக்கரு எடுத்துக்கொள்ள வேண்டிய சூழலையும், அதற்கான தேவையையும் திலிப் குமார்(கதை சொல்லியாக) தெளிவுபடுத்தியுள்ளார். மிகவும் திட்டமிட்ட வடிவில் மிகக் குறுகிய வடிவில் கச்சிதமாகச் செதுக்கியுள்ளார் தேவையானவற்றைத் தேவையானளவிற்குச் சேர்த்துள்ளார், திகட்டும் அளவில் எதையும் சேர்க்கவில்லை,விட்டுவிடவுமில்லை.மேலும் இவை பாலுணர்வு சம்மந்தமான கதையாகயிருப்பதால் ஒரு துளியாவது உணர்வைக் கிளறிவிடும் தன்மையில் அமைந்துவிடாமல் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் படைப்பாளிக்கு ஏற்பட்டுள்ளது,.

பொதுவாகத் தமிழில் விமர்சகர்கள் கதையைத் திரும்பக் கூறுவதை ஒரு கலையாக வைத்திருக்கிறார்கள். அது முறையானதாக இருக்காது என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது.ஆனால் இது ஒரு புதுவிதமான முயற்சி என்பதாலும் கொஞ்சம் சென்சிடிவ்வான விசயமாக இருப்பதாலும் கொஞ்சம் கதையைக் கூறலாம்.இது கூட வாசகர்களின் புரிதலுக்காகத்தான்( அதாவது இதுவரை இந்த நுலைப் படிக்காத வாசகர்களுக்காகதான்).

ரமா ஒரு தனியார் கல்லுரியில் பேராசிரியை.சென்னையில் வசிப்பவள். உமா ஒரு பள்ளி ஆங்கில ஆசிரியை.கோவையில் வசிப்பவள். இருவருக்கும் திருமணம் ஆகி இரண்டு,இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.இவர்கள் இருவரும் குஜராத்தி பெண்கள்.இருவருக்கும் வயது 40.அதாவது இருவருக்கும் சம வயது. குஜராத்தி சம்மேளனம் ஏற்பாடு செய்த ஒரு சுற்றுலாவில் ரமாவும் உமாவும் பொதுவாகச் சந்தித்துக் கொள்கிறார்கள்.இடம் தரங்கம்பாடி கடற்கரை அருகில். அங்கேதான் நமது கதைசொல்லியும் இருக்கிறார். அதாவது திலிப் குமார். அவர் இந்த குறுநாவல் எழுத அங்கேதான் தங்கியுள்ளார்.ரமாவும் உமாவும் ஒரே அறையில் தங்க வைக்கப்படுகிறார்கள்.

அப்போதுதான் அவர்களுக்குள் ஒரின பாலியல் உறவு நடைபெறுகிறது எனக் கதைசொல்லி அவர்களுக்குள் உரையாடல் வடிவில் கதையை நிகழ்த்துகிறார். இந்த வடிவில் திலிப்பின் நிகழ மறுத்த அற்புதம் என்ற சிறுகதை காலச்சுவடு இதழில் வெளிவந்து, பிறகு ஞாநியின் ஒற்றை ரீல் இயக்கத்தில் திரை வடிவமும் பெற்றது என்பதையும்,கடவு தொகுப்பில் வாசித்ததையும் நாம் நினைவு கொள்ளலாம்.

கதைசொல்லி ஒரு ஆண் என்பது அந்தக் குரலில் இருந்தே அடையாளம் காண முடிகிறது,. கதையை ரமாவுக்கும் உமாவுக்கும் நிகழும் பாலுணர்வு உறவின்போது வெளிப்படுத்தும் உரையாடல்களின் தன்மையில் ஒரு பெண் ஒரு பெண்ணைப் பார்க்கும் பார்வை அல்லாமல் பெண் பேசும் உரையாடலில் எல்லாம் பெண் பெயரை எடுத்துவிட்டு ஓரு ஆண் பெயரைப் போட்டு விட்டால் இது தெரியும். அல்லது ரமா பேசும் விசயங்கள் எல்லாம் ஒரு ஆண்தன்மையில்தான் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது ரமா ஒரு ஆண் தன்மையில்தான் படைக்கப்பட்டுள்ளாள்(ன்). இரண்டு பெண்கள்தான் உறவு கொள்வதாக இருப்பினும் அவர்களுக்குள்ளும் ஒரு நுட்பமான மேல் கீழ் ஆதிக்கம் இருப்பதையும் கதைசொல்லி காட்டுகிறார். இது பூடகமாகக் காட்டபடுகின்றன. ரமாவின் நடவடிக்கைகளிலிருந்தும் இதை நாம் விளங்கிக்கொள்ளலாம் உமாவின் புலம்பல்களிலிருந்தும் புரிந்துகொள்ளலாம். மேலும் சில நுட்மான அவதானிப்புகளிலிருந்தும் கண்டுபிடிக்கலாம்.

இரண்டு பெண்களுக்கும் நல்ல வசதியான வாழ்க்கைதான் அமைந்துள்ளன. ஆனால் உமாவுக்கு மட்டும் இளமையில் கொஞ்சம் பிரச்சைனைகள் இருந்ததாகக் காட்டப்படுகிறது. ஆனால் கல்யாண வாழ்வில் அவர்களுக்குப் பாலியல் போதாமைகளோ அல்லது பாலியல் பிறழ்வுகளோ இருப்பதாகக் காட்டப்படுவதில்லை. பிறகு எதற்காக இவர்களுக்கு ஒரின சேர்க்கை தேவைப்படுகிறது என்பதற்குதான் அவர்களின் வாழ்க்கை மற்றும் பிற பின்னணிகளைப் பார்க்க வேண்டும்.

ஒருவள் கோவையிலும்,மற்றவள் சென்னையிலும் வசிப்பவர்கள். ஒன்று மாநகரம்,மற்றொன்று நகரம். இரண்டும் போதுமான ஔரவிற்கு எக்ஸ்பேஸர் கொடுக்கும்.இருவருக்கும் ஆங்கில கல்வியின் பின்னணி இருப்பதையும் கவனிக்க முடிகிறது.அவர்களின் அறிவுகொடுத்த சுதந்திரத்தையும், கல்வி கற்றுக்கொடுத்த சுதந்திரத்தையும்,பொருளாதார சுதந்திரத்தையும்,தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் ஊடகங்கள் கற்றுக் கொடுத்த விசயங்களை, நடைமுறைபடுத்தி பார்க்கும் தைரியத்தை தனிமை கொடுத்தபோது, பரிசோதனை முயிற்சியில் அவர்கள் ஈடுபட்டு பார்க்கிறார்கள். அந்த முயற்சியின் விளைவாக அவர்கள் இதுவரை கண்டடையாத பல புது உண்மைகளைக் கண்டுபிடிக்கவும் , அவர்களுக்குள் அவர்களே சில விசயங்களைத் தத்துவார்த்தமாக விளங்கிக்கொள்ளவும், அவர்களின் உடல் மீது அவர்களுக்குள்ள சுதந்திரத்தை அவர்களே விளங்கிக்கொள்ளவும் முடிகிறது.

முதன்முதலாக அவர்களின் உடலை அவர்களே வெளிச்சத்தில் பார்த்துக்கொள்வதும்,சுய இரக்கத்தில் உமா தன் உடலை ஒரு பிச்சைக்காரியாக உருவகித்துப் பார்த்துக்கொள்வதும் நடைபெறுகிறது.அவளின் சுயசோகங்களை வெளிப்படுத்திக்கொள்ளவும்,அழுகையின் வழியாக அவற்றை வெளியேற்றுகிறாள் உமா. தனது பல அந்தரங்க விசயங்களை மிகவும் வெளிப்படையாக ரமாவிடம் உரையாட முடிகிறது என்பதுதான் இதில் கூடுதல் விசேசம். தன் கணவரிடம் கூட சொல்லமுடியாத எத்தனையோ விசயங்களை ஒரே நாள் தன் அறையில் உடனுறையும் தன்னின உறவுக்காரியிடம் பகிர்ந்துகொள்ள முடிகிறது என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம்.

இப்படி ஒரு நாளில் ஒரு முறை தங்கியிருக்கும் போது, இதுவெல்லாம் சாத்தியமா என்கிற கேள்வி எல்லாம் எழக்கூடாது. இது வெறும் புனைவுதானே என்கிற சமாதானமும் நம் கைவசம் இருக்கிறது, சரி இப்படி பெண்ணின ஒருபால் உறவு என்பது சாத்தியம் தானா என்கிற கேள்வி எழுப்புபவர்களுக்கு செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் வரும் விசயங்கள் வெறும் புனைவுகளிலிருந்து உருவாக்கப்படுவதில்லை. அவை உண்மைகளின் பக்கங்கங்களைப் பேசுகின்றன. அவற்றிற்கு ஆதாரங்கள் தினசரி வாழ்வின் பல்வேறு பக்கங்கங்களிலிந்தும் காண கிடைக்கின்றன. (சமீபத்திய உதாரணம் கள்ளக்குறிச்சி பள்ளியில் இரண்டு ஆசிரியயைகள் சுமார் ஐந்து வயதான பெண் குழந்தையைப் பாலியல் பலாத்தகாரம் செய்ய முயன்ற வழக்கு)

அதாவது புனைவிலிருந்து உண்மையும், உண்மையிலிருந்து புனைவும் ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ளன என்பதையே இவை காட்டுகின்றன,. இப்போது நமக்கு பெண்களின் ஒரின உறவு என்பது அதிர்ச்சியான விசயமாக இருக்காது என்பது தெளிவாக விளங்குகிறது.ஆனால் தமிழுக்கு பெண் ஓரின உறவைச் சொல்லும் முதல் படைப்பு இதுதான் என்பதால் பல்வேறு தரப்புகளிலிருந்தும் அதிர்ச்சியும் எதிர்ப்பும் கிளம்பினால் ஆச்சரியமில்லை.

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டுதான் கதைசொல்லி எல்லா தாக்குதல்களிலிருந்தும் தன்னையும் படைப்பாளியையும் காப்பாற்றும் விதத்தில் பல விசயங்களுக்கு விடைகளாகச் சில விளக்கங்கங்களையும் கூறியுள்ளார்.சில தத்துவார்த்தமான உரையாடல்களையும் கதாபாத்திரங்களுக்குள் நிகழும்படி அமைத்துள்ளார். இந்தப் பெண்களை குஜராத்திகளாக்கியதும் கூட அப்படியானதாக இருக்கலாம். எப்படிக் கேள்விகள் வந்தாலும், அவற்றைச் சமாளிக்கும் வகையில் சில விளக்கங்களைக் கதைசொல்லியே கொடுத்திருப்பதும் இந்த வகையிலானதாக நாம் நினைக்க சாத்தியமுள்ளன.

இந்தத் தொகுப்பில் இவை தவிர முன்று சிறுகதைகள் உள்ளன. அவை கடவு சிறுகதை தொகுப்பில் இல்லாதது. இந்த நுலை சந்தியா பதிப்பகம் மிக அழகாக வெளியிட்டுள்ளார்கள்,.அட்டைப்படத்தை ராஜகோபால் அழகாக வடிவமைத்துள்ளார். நல்ல நுல்களைத் தேடி வாசிக்கும் வாசகர்கள் நிச்சயம் இந்தக் குறுநாவலை வாசிக்கலாம்,. இவற்றில் உள்ள விசயங்களை விவாதிக்கவும், விமர்சிக்கவும் இடம் கொடுக்கும் படைப்பாகத்தான் திலிப்குமார் இந்த நுலையும் கொடுத்துள்ளார். அவரின் வாசகர்களுக்கு அவர்மீது இருந்த நம்பிக்கையை இப்படி ஒரு சென்சிடிவ்வான படைப்பு வழியாகவும் காப்பாற்றியுள்ளார் என்பதுதான் கூடுதல் சிறப்பு.

•••

( ரமாவும் உமாவும் / திலிப்குமார் /சந்தியா பதிப்பகம் / விலை ருபாய் 80 / பக்கங்கங்கள் 127. )

***

நன்றி . தீராநதி, மார்ச 2012

sibichelvan@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s