Home

இன்றுடன் சி.மணி இறந்து மூன்று வருடங்கள் முடிந்து விட்டன. ஆனாலும் என்ன? அவரைப் பற்றிக் கவிஞர்களும்., கவிதை ஆர்வலர்களும் நன்றாகவே நினைவு வைத்திருக்கிறார்கள். அவர் கவிதைகளை நினைவு வைத்திருக்கிறார்கள். அது போதும். காலம் முழுவதும் அவர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் தமிழுக்காகதான் தன்னையும், தன் வாழ்வையும் அர்ப்பணித்தவர். வெறுமனே இப்படிச் சொல்வது மிகையாகக் கூட சிலருக்குத் தோன்றாலாம்.

அவர் சேலத்தில் மிகப் பெரிய பணக்கார்க்கு மகனாகப் பிறந்தார். பள்ளிக் கல்வி உள்ளுரில் முடித்தார்.உயர்கல்வியைப் படிப்பதற்காகச் சென்னைக்கு வந்தபோதுதான் சி.சு.செல்லப்பாவின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. ஆங்கில இலக்கியம் படித்த சி.மணி என்கிற பழனிசாமிக்கு டி.எஸ்.எலியட்டின் கவிதைகளில் ஆர்வம் அதிகம். அவற்றைத் தமிழ் வாழ்க்கையின் அடையாளங்களோடு நரகம், வரும்போகும் என்ற கவிதைகளில் சோதனை முயற்சி மேற்கொண்டு வெற்றியடைந்தார்.

 

டி.எஸ்.எலியட்டின் traditional and individual talant என்ற கட்டுரையில் அவர் சொல்வது போலவே மரபையும் நவீனத்தையும் கலந்து கவிதையாக்கம் செய்ததுதான் சி.மணியின் ஒட்டு மொத்த கவிதைகளின் சாரம்.

ஆங்கில இலக்கியம் படித்திருந்தாலும் தமிழ் கவிதையின் சாரத்தை உள்வாங்கிக்கொள்வதாற்காக மரபுக் கவிதைகளையும், தமிழ் இலக்கணத்தையும் கற்றுக் கொண்டார். கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்கு அதாவது இலக்கணத்தை கஷ்டமாக நினைப்பவர்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தான் நடத்திய நடை இதழில் இலவச இணைப்பாகக் கொடுத்தார்.

பவானிக்கு அருகில் இருக்கும் குமாரபாளையத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லுரியில் ஆங்கில பேராசிரியராகப் பணிபுரிந்த சி.மணி நடை இதழைத் தொடங்கவும் சாதனா பதிப்பகம் தொடங்கவும் தன் வருவாய் ஈட்டும் பணியை உதறிவிட்டு வந்தார்.

தமிழில் சிறந்த சிற்றிதழாக நடை இதழை எட்டு இதழ்கள் கொண்டு வந்தார். இந்த நடை இதழில்தான் ஞானக்கூத்தன் போன்றவர்கள் எழுத ஆரம்பித்தார்கள். ந.முத்துசாமி,வெங்கட் சாமிநாதன்,அசோகமித்திரன்,சுந்தர ராமசாமி போன்றவர்களும் நடை இதழ்களில் தங்கள் பங்களிப்பைச் செலுத்தினார்கள்.

சிற்றிதழ்கள் நிற்பதற்கு வழக்கமான காரணமான பொருளாதார காரணங்களால், அவரால் மேற்கொண்டு நடை இதழைக் கொண்டு வர முடியவில்லை. நடை இதழுக்காகவும், சாதனா பதிப்பகத்திற்காகவும் தொடங்கப்பட்ட அச்சகம் தள்ளாட ஆரம்பித்து ஒரு கட்டத்தில் தன் உயிரை விட்டது. இந்த அச்சகத்தில்தான் நடை பிரிண்ட்டானது. அத்தோடு தமிழின் முதல் பேப்பர் பேக் நாவலாக அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் நாவல் மிகச்சிறப்பாக வெளிவந்தது. அந்த நாவலுக்கு முன்னுரை எழுதியவர் சி.மணிதான். (முதல் பதிப்பில் அந்த முன்னுரை இருந்தது).

நடையில் சி.மணி பல பெயர்களில் எழுதிவந்தார். வே.மாலி என்ற பெயரில் கவிதைகளை எழுதியது சி.மணிதான் என்பதை க.நா.சு போன்றவர்கள்கூட கண்டுபிடிக்க முடியவில்லை.அவர் வே.மாலி என்ற பெயரில் எழுதுவது சுந்தர ராமசாமிதான் என்று நினைத்தார் என எனக்குக் கொடுத்த பேட்டியில் சி.மணி இந்த விஷயத்தைப் பதிவு செய்துள்ளார். ( இந்தப் பேட்டி பிறகு ஒரு சந்தர்பப்பத்தில் வலையேற்றலாம்).

 சி.மணி என்ற பெயரில் எழுதிய கவிதைகளுக்கும், வே.மாலி என்ற பெயரில் எழுதிய கவிதைகளுக்கும் முற்றிலும் வித்தியாசம். அவ்வளவு வித்தியாசம் இருந்ததால் இதை யாரலும் கண்டுபிடிக்க முடியாதளவிற்கு அவ்வளவு நுட்பமாகக் கவிதைகளை எழுதியிருந்தார் சி,மணி.

சி.மணி.,வே.மாலி,ஓலுலுலு,தாண்டவராயன் போன்ற பெயர்களில் எழுதி வந்தார். கவிதைகளை மொழிபெயர்ப்பதில் அவருக்கு அளப்பரிய ஆவல்.போலவே பல்வேறு விஷயங்களையும்மொழிபெயர்த்திருக்கிறார்.க்ரியா பதிப்பத்திற்காக அவர் தோண்டு கிணறுகள்,டேனிடா போன்ற புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறார். இவை தவிர க்ரியா அகராதியில் முக்கியமான பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார்.

அவர் காலமாவதற்குக் கொஞ்சம் நாட்கள் முன்புதான் ப.ரா.சுப்பிரமணியம்( அகராதியியலில் வல்லுநர் ) தொகுத்த தமிழ் இலக்கியத்தில் சிறுகதைகள்,கட்டுரைகள் போன்றவற்றில் பயின்று வரும் நடைகள் பற்றிய ஆங்கிலப் புத்தகத்திற்காகத் தமிழிலிருந்து பல படைப்புகளை மொழியாக்கம் செய்திருந்தார். ப,ரா.சுப்பிரமணியம் இந்தப் புத்தகத்தை (style reader) மிக அழகாகக் கொண்டு வந்தார்.இந்தப் புத்தகம்  வெளிநாட்டில் தமிழ்ப்பயிலும் மாணவர்களுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டிருந்தத 

இவை தவிர க்ரியா பதிப்பகத்தில் கொண்டு வந்த தாவோ தே ஜிங் என்ற சீன புத்தகத்தின் மொழிபெயர்ப்பு மிக முக்கியமான புத்தகம். இந்தப் புத்தகத்தின் அருமை தெரிந்தவர்கள், எந்நாளும் தங்கள் கையோடு வைத்துக்கொள்ளும்படியான புத்தகம். க்ரியா அந்தப் புத்தகத்தைத் தற்போது இரண்படாவது பதிப்பாகக் கொண்டு வந்திருக்கிறது என்பதிலிருந்தே அந்தப் புத்தகத்தின் முக்கியத்துவத்தை நாம் அறிந்துகொள்ளலாம்.

மேலும் அடையாளம் பதிப்பத்தார் கொண்டு வந்த மிகச் சுருக்கமான எளிய அறிமுகப் புத்தகங்களின் வரிசையில் ப்ராய்டு,பௌத்தம், புத்தம் என்ற புத்தகங்களை மொழியாக்கம் செய்துள்ளார்.  .மைதிலி மொழியில் முதன்முதலாகக் கவிதைகளை ஒரு புத்தகமாகப் கொண்டு வந்துள்ள உதய நாராயணனனின் தன்னிலை,முன்னிலை ஒருமை என்ற கவிதை புத்தகத்தை ஆங்கிலத்தின் வழியாக மொழிபெயர்த்தவர் சி.மணிதான்.

நடை இதழ்களின் தொகுப்பையும்,நடை இதழோடு இலவச இணைப்பாக வெளியிட்ட இலக்கணப் புத்தகத்தையும் சந்தியா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளார்கள். இப்போதும் கிடைக்கிறது.

இது தவிர சி.மணியின் மொழி பெயர்ப்பில் ரஷ்யா தத்துவ ஞானி குரூட்ஜியின் in search of miraculose என்ற புத்தகத்தை முழுமையாக மொழியாக்கம் செய்து வைத்துள்ளார்,. இந்தப் புத்தகத்தை வெளிக்கொண்டு வரும் வேலையை நானும் கி,அ,சச்சிதானந்தமும் பல முறை முயன்றும் இன்றுவரை வெளிகொண்டு வர முடியவில்லை. புத்தகம் பதிப்பிக்க தேவையான பதிப்புரிமை வாங்குவதில் ஏற்பட்ட சிக்கல்தான் இது வெளிவர தடையாக உள்ளது. கவிஞர் கலாப்ரியா பல முறை இந்த மொழிபெயர்ப்பை ஒரு பிரதியை நகலெடுத்துக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். பெங்களுர் நண்பர்  மகாலிங்கம் இதை எப்படியாவது கொண்டுவர தன்னால் ஆன  முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.ஆனாலும் அது இன்றுவரை நடைமுறைக்கு சாத்தியமாகமலே உள்ளது

இப்படி கடந்த 1950களின் மத்தியில் ஆரம்பித்த பயணம் 2009 ஏப்ரல் 5ஆம் தேதி ஒரு முடிவிற்கு வந்தது.

இதற்கு இடையில் இலக்கியப் பயணத்தில் தந்தை சேர்த்து வைத்து ஜமீன்தார் போன்ற வாழ்வையும். பல கிராமங்களை உருவாக்கும் அளவிற்கு இருந்த நிலபுலன்களையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வந்தார். தன் இறுதி காலத்தில் எல்லாவற்றையும் இழந்தார்.

ஆனாலும் தன் அன்பான மனைவி ஜெகதாம்பாளின் ஆதரவோடு தன் நாட்களைக் கழித்தார். இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்ததால்தான் அவர் தன் உடமைகளை இழந்துவிட்டார் என்பது போன்ற சுயபச்சாததாபங்கள் எதுவும் அவருக்குக் கடைசிவரை இல்லை.

விளக்கு விருது சி.மணி பெற்றபோது எடுத்த படம்.

இடமிருந்து சி.மோகன்,வெளி ரங்கராஜன்,  சி.மணி,ஞானக்கூத்தன்,க.வை.பழனிசாமி,சிபிச்செல்வன்

வாழ்நாளின் கவிதை சாதனைக்காக விளக்கு விருது பெற்றார்.குமரன் ஆசான் விருதையும், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் வழங்கிய இரண்டு விருதுகளும் தான் அவருக்குத் தன் வாழ்நாளில் கிடைத்த அங்கீகாரங்கள்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் இலக்கிய வரலாற்றில், புதுக்கவிதையின் பக்கங்களில் அழியாத  இடம்பெற்றிருக்கிறார். அதுதான் அவரின் அழியாத சொத்து. சி.மணியின் பெயரைக் காலத்தாலும் அல்லது யாராலும் அழித்துவிட முடியாது.அந்த அர்த்தத்தில்தான் நாம் அவரின் நினைவு நாளை கவிஞர்களின் தினமாகக் கொண்டாட முடிவு செய்திருக்கிறோம். கவிதை எழுதும் யாரும் அவரின் வாரிசுகளே… கவிதை வாசிக்கும் யாரும் அவரின் கவிதை போட்டு வைத்த பாதையில் எழுத வந்தவர்களின் கவிதைகளைதான் வாசிக்கிறார்கள் என்பதையும் நாம், நம் நினைவில் போற்றுவோம்.

•••

sibichelvan@gmail.com

 

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s