Home

கவிதை குறித்த உரையாடல்களுக்கான, விவாதங்களுக்கான ஒரு திறப்பு

சிபிச்செல்வன்

கடந்த ஞாயிறு 8/4=2012 அன்று ஓசூரில் நடைபெற்ற கூட்டத்தைப்பற்றி இந்தப் பதிவு பேஸ்புக்கில் திருஜி என்ற நண்பர் பதிவுசெய்துள்ளார். இவற்றில் மூத்த கவிஞர்கள் ஆதவன் தீட்சண்யாவும் ,பா.வெங்கடேசனும் சொன்னதாக உள்ள கருத்துகளுக்கு சில மாற்று கருத்துகளை நான் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். மூத்தோர் கருத்தை மறுத்து பேச வேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டிருக்கிறேன். குறிப்பாக நான் அதிரடியான கருத்துகளைச் சொல்வதில் ஆர்வம் இல்லாதவன். பல தவறான கருத்துகளையும் கண்டும்கூட பதில் அளிப்பது என் வேலை இல்லை என நினைத்து ஒதுங்கியிருப்பவன். இந்தப் பின்னணியில் மூத்தகவிஞர்களின் கருத்துகளில் சில கருத்துகள் அபத்தமாக இருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியது என் கடமையும்கூட.

*அவர் முன்வைத்த கருத்து. “இந்தியாவில் ஒருவன் எந்த வித அரசியல் சார்பும், புறச்சூழலின் எந்த பாதிப்பும் இல்லாமல் ஒருவன் வாழ்ந்துவிட முடியும். ஆனால் றியாஸ் ஈழத்தில் வாழ்பவர். அங்கே எந்த ஒரு மர மட்டையும் புறச்சூழல்களின் பாதிப்பு இல்லாமல் வாழ்ந்துவிட முடியாது. அப்படி வலியும் வேதனையுமான ஒரு அசாதரணமா சூழலில் வாழ்ந்த றியாஸ் என்ற படைப்பாளியின் இந்த தொகுப்பில் அப்படியான புறவழிபாதிப்புகள் இந்த படைப்பில் இல்லை. தான் வாழும் காலத்தை இந்த கவிதைகள் பிரதிபலிக்கவில்லை. படைப்பாளி என்பவன் தான் வாழும் காலத்தை பிரதிபலிக்கவேண்டும். அது இதில் மிஸ்ஸிங். 50 ஆண்டுகள் கழித்து ஒரு கவிதையை வாசிப்பவன் இந்த கவிதைக்கான காலநிலை இல்லாமல் வாசிக்கப்படும்போது அது வெறும் சாதாரண பிரதியாகத்தான் இருக்கும்” என்கிற அர்த்தத்தில் பேசி முடித்தார். இதை பா.வெங்கடேசன் வரவேற்றார்.

**

இனி முதலில் ஆதவன் தீட்சண்யாவின் மேலே உள்ள கருத்திற்கு ஒரு எளிய சுட்டிக்காட்டல்.

இந்திய சுதந்திர போராட்டம் நடைபெற்ற காலகட்டத்தில்தான் புதுமைப்பித்தன் சிறுகதைகளை எழுதினார். அவரின் எத்தனை கதைகளில் சுதந்திர போராட்டத்தைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பு.பியைப் பற்றியும் இதே போன்ற குற்றச்சாட்டைச் சுமத்தினார்கள். ஆனால் அவரின் கதைகள் இன்றளவு உயிர்ப்புடன் உள்ளது.அதே போலதான் றியாஸ் ஈழப் போராட்டத்தைப் பற்றி ஏன் எழுதவில்லை என்று கேட்பதும்.

ஒரு படைப்பாளியைப் பார்த்து நீ ஏன் இந்த விஷயங்களை எல்லாம் எழுதவில்லை என்று யாரும் கேள்வி எழுப்ப முடியாது.அங்கே வாழும் மர மட்டைகள் கூட அந்தச் சூழலின் புறத்தாக்கத்தை உணரும் என ஆதவன் குறிப்பிட்டுள்ளது அவரது ஈழத்தமிழர்களின் மேல் இருக்கும் பரிவைக் காட்டுகிறது. அதன் மேல் நான் எந்த சந்தேகத்தையும் எழுப்ப முடியாது. ஆனால் இங்கே தமிழ் நாட்டில்கூட சில போலி கவிஞர்கள் ஈழப் போரட்டத்தை பற்றி அவர்களின் போலியான பரிவை வெளிப்படுத்தும் கவிதைகளை எழுதியிருக்கிறார்கள். அவற்றை நான் மட்டும் அல்ல ஆதவன் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார். நான் யாரை கவிதை எழுதியவர்கள் என குறிப்பிடுகிறேன் என்பது ஆதவனுக்கு தெரியும். அதேபோல காலத்தைப் பிரதிபாலிக்காத கவிதைகளின், 50 ஆண்டுகள் கழித்து, அவற்றின் நிலை குறித்து ஆதங்கப்பட்டிருக்கிறார்.

பாரதி எழுதிய பல சுதந்திர போரட்ட எழுச்சி கவிதைகள் இன்று என்ன பொருத்தப்பாடுகளைக் கொண்டிருக்கிறது என்பதை நாம் யோசித்துப் பார்க்கலாம். இன்று நடைபெறுகிற கூடங்குளத்தைப் பற்றிய போரட்டக் கவிதைகள் எழுதினால் அவற்றை கவிதை இல்லை எனச் சொல்ல மாட்டோம் அவை மனதைப் பாதித்தால். ஆனால் 50 வருடங்கள் கழித்து ஒரு தலைமுறை அந்தக் கவிதையை வாசித்தால் அதே உணர்வோடு அந்தக் கவிதையை வாசித்துப் புரிந்துகொள்வார்களா.பாரதியின்  ஆனந்த சுதந்திரத்தை அடைந்துவிட்டோம்… என்ற கவிதையை நாம் அன்று அவர் பாடிய அதே உணர்ச்சி எழுச்சியோடு புரிந்துகொள்கிறோமா.. அந்தக் கவிதைக்கு தமிழ்க் கவிதை உலகில் இன்று என்ன இடம் இடமிருக்கிறதோ அதே தான் பிறரின் அரசியல் கவிதைகளுக்கும் ஏற்படும்.

படைப்பாளி என்பவன் தான் வாழும்  காலத்தைப் பிரதிபலிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அப்படி எந்தக் கட்டாயமும் கிடையாது என்பதற்குத் தமிழக கவிஞர்கள் இருவரை உதாரணம் காட்டி விளக்கலாம். தாணுபிச்சைய்யா என்று ஒரு இளங்கவிஞர் உறைமெழுகின் பொன்மஞ்சாடி என ஒரு கவிதை தொகுப்பைக் கொண்டு வந்திருக்கிறார்.அவர் ஒரு பொற்கொல்லர். அந்தக் கவிதைகள் அந்தப் பொற்கொல்லர் வாழ்வினைப் பற்றியும், தங்கம் ஆபரணங்களாகச் செய்வதைப் பற்றியும் கவிதைகள் எழுதியுள்ளார். தேவதச்சன் என்கிற கவிஞர்  சுமார் 40 வருடங்களாக கவிதை எழுதி வருகிறார். பலருக்கும் அவரின் கவிதைகளைப் பிடிக்கும். தமிழின் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவர். அவருக்குத் தொழில், சொந்தமாக  நகை கடை நடத்தி வருகிறார். பல வருடங்களாக நகை கடை நடத்தி வருகிற ஒருவர், கவிதையில் தாணுபிச்சையாவின் கவிதைகள் போல் ஏன் எழுதவில்லை என யாரும் கேள்வி எழுப்ப முடியுமா எனன்? தேவதச்சன் பொற்கொல்லர் கிடையாது, அதனால்தான் அவர் கவிதைகளில்  பொன்னைப் பற்றிய கவிதைகள் எழுதப்படவில்லை எனச் சொல்வது எவ்வளவு அபத்தமாக இருக்கும்.

அதே போலதான் றியாஸ்ஸின் கவிதைகள் ஈழத்தின் நிலையை, வாழும் கால வரலாற்றைப் பிரதிபலிக்கவில்லை என்பதும் ஆதவனின் ஆதங்கம்தான். ஆதவனின் அரசியல் கவிதைகள் வேறு. அதே போல றியாஸ் எழுத வேண்டும் என ஆதவன் எதிர்பார்க்கிறாரா.

கவிதைகளில் அரசியல் கவிதைகள் எழுதுபவர்களை ஒரு காலத்தில் நான் கவிகளாகவே ஏற்றுக் கொண்டவன் இல்லை. ஆனால் என் கவிதை வாசிப்பின் எல்லைகள் விரிய விரிய மொகம்மது தார்வேஷ்,பாப்லோ நெருடா போன்றவர்களின் கவிதைகளும்,சீன கவிஞர் பெய்டோ போன்றவர்களின் கவிதைகளும் இப்படியான அரசியல் கவிதைகள்தான். இவர்களையும் இன்னும் பல அரசியல் கவிகளையும் வாசித்தபிறகு அரசியல் கவிதைகளுக்கும் கவிதை உலகில் ஒரு இடம் இருப்பதை ஏற்றுக் கொள்ள வைத்தது. அதே போல ஆதவன் தீட்சண்யாவின் கவிதைகள் போலவே  ஒட்டுமொத்த கவிதைகளும் இருக்க வேண்டும் என அவர் எதிர்பார்ப்பது அவரின் அரசியல் சார்போ என நினைக்க தோன்றுகிறது. அரசியல் கவிதை வகைகளைத் தவிர இன்னும் எண்ணற்ற கவிதை வகைமைகள் இருப்பதையும் ஆதவன் தீட்சண்யாவிற்குத் தெரியும். ஆனால் தெரியாதது போல நடந்துகொள்வதாகவே நான் நினைக்கிறேன்.

கிட்டத்தட்ட இந்தக் கருத்துகளை பா.வெங்கடேசன் ஆதரித்துப் பேசியுள்ளார்.அவருக்கும் இதே பதில்கள் தான்.

* அதற்கு ப.வெங்கடேசன் மொழி மட்டுமே கவிதை ஆகாது, ஒரு படைப்பாளி நிச்சயம் காலத்தை முன் நிறுத்தத்தான் வேண்டும். ஒரு படைப்பாளி எழுதி தான் காலத்தை கடக்கிறான். அவன் வாழும் காலத்தை பதிவு செய்யவேண்டும் என்று விவாதிக்கும் பொழுது. authors death பற்றி பேசி முத்தாய்ப்பாக முடித்தார். ஒரு படைப்பாளி தன் படைப்பை முடிக்கும் போது வாசகனாகவும் தன் படைப்பை பூர்த்தி செய்து சீல் வைக்கவேண்டும். அப்படி வரும் படைப்புகள் தான் வாசக பிரதியாகிறது. மற்றவை வெறும் பிரதிகளாக கடந்து செல்கிறது.

பா.வெங்கடேசனின் இந்தக் கருத்துகளுக்கு பதில் சொல்ல வேண்டும். படைப்பாளி காலத்தைப் பதிவு செய்ய  வேண்டும். சரிதான். ஆனால் அவன் வாழும் காலத்தையா அல்லது எதிர் காலத்தையா எனச்சொல்ல வேண்டும்.

கவி வாழும் காலம் என்பது எவ்வளவு ஆண்டுகள். ஒரு 100 வருடம். அவன் இறந்தவுடன் அவன் கவிதையும் அவனோடு உடன்கட்டை ஏறிவிட வேண்டுமா? படைப்பாளி தான் வாழும் காலத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்கிறார் பா.வெ. அப்படியானால் கவிதைக்குள் எந்தக் காலத்தைப் பதிவு செய்ய வேண்டும். கவிதையில் மூன்று காலங்கள் கிடையாது. கவிதையில் எப்போதும் நிகழ்காலம் மட்டும்தான்

இது சரியா எனக் கேட்பவர்களுக்கு சங்க கவிதை ஒன்றைப் பார்க்கலாம். எந்தையும் உந்தையும் யாரோ என்ற கவிதை கவிஞன் வாழும் காலத்தை மட்டும் பதிவு செய்திருந்தால் அந்தக் கவிதையின் ஆயுள் என்றோ முடிந்திருக்கும். ஆனால் அந்தக் கவிதை பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து எப்படி உயிர் வாழ்கிறது. எவ்வளவு கால மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும் இந்தக் கவிதை மட்டும் நிகழ்காலத்தில் எப்படி உயிர்வாழ்கிறது.இந்தக் கவிதையில் அப்படி என்ன கவிஞன் வாழும் காலத்தைப் பதிந்திருக்கிறான். கவியின் கால திருமண முறைகளும் இன்றைய கால திருமண முறைகளும் அப்படியே உள்ளதால் இந்தக் கவிதை உயிர் வாழ்கிறது என்று சொல்ல முடியுமா? காலப்போக்கில் எத்தனையோ திருமண முறைகள் இருந்திருக்கலாம். எத்தனையோ காதலில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். ஆனாலும் இந்தக் கவிதை பல தலைமுறைகளைக் கடந்து உயிர் வாழ்கிறதே அது எப்படி.?

அந்தக் கவிதையில் ஒரு eternal truth இருக்கிறது.அதனால் அது தன் காலத்தை எப்போதும் நிகழ்காலத்திற்குக் கொண்டுசெலுத்திக்கொண்டிருக்கிறது.இதை பா.வெங்கடேசன் தெரிந்துகொள்ள வேண்டும்.

அப்புறம் மொழி மட்டுமே கவிதையாகாது  என்ற பா.வெவின் கருத்து. மொழி மட்டுமே கவிதை ஆகாதுதான். ஆனால் author deathக்குப் பிறகு கவிதை எங்கே யாரின் துணையில் உயிர் வாழ்கிறது.கவிதையின் அர்த்தங்களைக் கவிஞன் திட்டமிட்டு தன் கவிதைக்குள் சிறைபிடிக்க முடியுமா? அப்படியானால் கவிதை வாசிக்கிற ஒவ்வொரு வாசகனும் ஒவ்வொரு அர்த்தத்தை எங்கேயிருந்து உருவாக்கிக்கொள்கிறான். அதை ஒவ்வொரு முறையும் கவிஞன்தான் உருவாக்கி ஒவ்வொருவருக்கும் ஏற்ப தந்துகொண்டேயிருக்கிறானா?  கவிதை எழுதி முடித்தபின் கவிஞன் தான் அந்தக் கவிதையோடு செத்துப்போய்விடுகிறானே பா.வெ சொல்வது போல. பிறகு எப்படி மொழியின் துணையில்லாமல் கவிதையை வாசகன் அர்த்தப்படுத்திக்கொள்கிறான். இந்த மொழியின் விளையாட்டு இருக்கிறதே அதைக் கவிஞன் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவோ அல்லது அவற்றைச் சுருக்கியோ அல்லது விரித்தோ வைத்துக்கொள்ள முடியாது. அது கவிதையில் தனக்கு முன்னும் பின்னும் அமைந்துள்ள அர்த்தங்களின் தகவமைப்பிற்கு ஏற்பவும் , வாசகனின் மொழியறிவிற்கு ஏற்பவும், வாசகனின் கலாச்சாரத்திற்கேற்பவும்,இன்னபிற இதுபோன்ற காரணங்களுக்கும் காலத்திற்கேற்ப ஏற்படும் மொழியின் அர்த்தங்களுக்கேற்பவும் தன் அர்த்தத்தை விரித்துக்கொண்டோ அல்லது சுருக்கிக்கொண்டோ போகிறது. அதில் கவிஞனின் மொழி அங்கே என்ன வேலையைச் செய்கிறது.மொழி மட்டுமே கவிதையில்லை என்றால் வேறு என்ன கவிதையின் வேலையைத் தொடர்ந்து செய்கிறது.

இவற்றை எல்லாம் சொல்லுவரா பா.வெங்கடேசன்.

••

* சாகிப்பின் கவிதைகள் குறித்தும் அதன் சிறப்புகள் குறித்தும் பேசிய நண்பர்கள். இவரின் கவிதைகள் அது எழுதப்பட்ட காலத்திலேயே தொகுப்பாக வந்திருக்கவேண்டியவை. இப்போது இது சற்றே பழையதாகிவிட்டதாக தெரிவித்தார்கள். இது ஐந்தாடுகளுக்கு முன்பே வந்திருக்கவேண்டிய முக்கியமான படைப்பு. இந்த பிரச்னை கவிதைக்கு தான் இருக்கிறது, கதைகளுக்கு இல்லை என்றார் பா.வெங்கடேசன். இதே ஆபத்து வே.பாபுக்கும் இருப்பதாக ஆதவன் கவலையோடு தெரிவித்தார்.

இந்தகக் கருத்துகளும் சரிதானா . கவிதைகள் எழுதப்பட்ட காலத்திலேயே ஒரு தொகுப்பாக வந்திருக்க வேண்டும். அதுகொஞ்சம் காலம் தாழ்த்தி வந்ததால் அது தன்கவிதை தன்மைகளை இழந்து விட்டதாகவிடும் என்றால் அது சரிதானா. பல கவிதைகளுக்கும் கவிஞர்களுக்கும் அப்படிதான் நேர்கிறது என்பது வேறு விஷயம். ஆனால் நான் சொல்வது கவிதையைப் பற்றி. குப்பைகளைப் பற்றியல்ல.

உண்மையாகவே ஒரு கவிதை புத்தகம் அது கவிதைகளைக்கொண்டிருப்பின், அவை 5 வருடங்களுக்குமுன் வந்தால் என்ன அல்லது 5000 வருடங்களுக்குமுன் வந்திருந்தால் என்ன? அது கவிதைதான்,  அவை எத்தனையோ ஆண்டுகளுக்குமுன் வந்தது என்பதாலேயே அதை நாம் கவிதையெனக் கொண்டாடுவதும் இல்லை. அல்லது கொஞ்சம் நாளுக்கு முன்தான் வந்திருந்தாலும் கவிதையல்லாததை நாம் கவிதை எனக் கொண்டாடுவது இல்லை. அப்படி 5 வருடங்களுக்கு முன்னால் வந்திருக்காத கவிதை புத்தகம் கொஞ்சம் பிந்தி வந்ததால் அதை கவிதை புத்தகம் எனச்சொல்ல முடியாது என்று சொல்வதும். அதே புத்தகம் 5 வருடங்கள் முந்தி வந்திருந்தாலும் அது கவிதைகளைக் கொண்டிருக்கவில்லை என்றால் அந்தப் புத்தகத்தை கவிதை புத்தகம் இல்லை என்றுதான் சொல்லியிருப்போம். அதை யாரும் காப்பாற்ற முடியாது. அதை எழுதிய கவிஞனாலும்கூட.

அந்தக் கவிதையிலோ அல்லது அந்தப் புத்தகத்திலோ போதிய உயிர்ச்சத்து இல்லாமல் இருந்திருக்கலாம்.அதனால் அது தன் உயிரை இழந்திருக்கலாம்.அதுதான் உண்மையாக இருக்கும்.

5 வருடங்களுக்கு முன் வராத கவிதைகள், சங்ககால கவிதைகள் அல்லது சுமார் 50 வருடங்களுக்கு முன் எழுதிய புதுக் கவிதைகள் கூட இன்றும் படிக்க முடிகிறதே. அவற்றை இனி நாம் வாசிக்க வேண்டாம் என முடிவு செய்துவிடலாமா என்ன?

இந்தப் பிரச்சனை கவிதைகளுக்குதான் இருக்கிறது.கதைகளுக்கு இல்லை என்கிறார் பா.வெங்கடேசன். அப்படியே தலைகீழாக மாற்றிச் சொல்லுகிறார். ஒரு நல்ல கவிதையையும் ஒரு நல்ல சிறுகதையையும் எடுத்துக்கொண்டால் வேகமாகப் பழையதாகும் தன்மை கவிதையைவிட சிறுகதையில் அல்லது கதையில்தான் அதிகம். ஏனெனில் கவிதையைவிட கதையில்தான் காலத்தின் வெளிப்படையான பதிவு அதிகம். எவ்வளவுதான் பூசிப்பூசி மறைத்தாலும் கதையின் விவரணைகளை வைத்து கதையின் மொழியை வைத்து காலத்தை நாம் அறிந்துகொள்ளலாம். ஆனால் ஒரு நல்ல கவிதையில் இப்படி வெளிப்படையான காலம் எதையும் தேர்ந்த கவிஞன் வைக்க மாட்டான்.அதோடு கவிதையின் ambiquity தன்மையால் கவிதையின் காலம் குழம்பிதான் மறைந்து நிற்கும்.. காலத்தைப் பெரும்பாலும் தேர்ந்த கவிஞன் மறைத்து மறைத்துதான் கவிதைக்குள் வைப்பான் அல்லது கவிதையே byitself தன்னை அப்படி மறைத்து வைத்துக் கொண்டு வேளைக்கொரு பொருளையும் அர்த்தத்தையும் கொடுக்கும் வல்லமை கொண்டது. ஆனால் இந்த சாத்தியங்கள் கதைக்குள் மிக மிகக் குறைவு.இது பா.வெங்கடேசனுக்குத் தெரியாதா என்ன?

அவர் வெறும் கவிஞர் மட்டுமல்ல.. அவர் ஒரு சிறுகதை ஆசிரியரும்கூட… பின்னால் ஒரு நாவலையும் எழுதியிருக்கிறார். அதனால் நிஜமான அர்த்தத்தில் கவிதையின் வலிமை என்ன என்பதை பா.வெ அறிந்திருப்பார். ஆனால்  விவாதம் செய்ய வேண்டும் என்பதிலும் தான் சொல்வதே சரியானது என்ற நினைப்பும்தான் அவரை இப்படிப் பேச வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். அவரின் இந்தக் குணத்தை சேலத்தில் நடந்த தக்கை கூட்டத்திலும் கவனித்தேன். தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் மற்றவர்களுக்கு எதுவுமே தெரியாது என்று ஒரு எண்ணம் அவருக்கு இருப்பதை சேலத்தில் அவரின் உரையாடல்களின் வழியாகவும் நடவடிக்கைகளிலிருந்தும் அறிய முடிந்தது.

இந்தப் பதிவிற்கு உடனே ஒரு பதிலை விரவாக எழுத வேண்டும் என்ற எண்ணம் உதித்தது இரண்டு எழுத்தாளர்கள் , கவிஞர்களும்கூட , இருவரையும் நான் மதிப்பவன். அவர்கள் இப்படி சொல்லியிருக்கிறர்களோ என்ற ஆதங்கத்திலும் கோபத்திலும்தான் இதை எழுத நேர்ந்தது.

•••

sibichelvan@gmail.com

sibichelvanm@gmail.com

Advertisements

One thought on “கவிதை குறித்த உரையாடல்களுக்கான, விவாதங்களுக்கான ஒரு திறப்பு

 1. மொழியின் துணை கொண்டு அழகியல் மற்றும் நுண் உணர்வுகளால் மனத்தை நெகிழச் செய்து உயிர்க்கச் செய்யும் புலன் உணர்வுகளின் கொண்டாட்டமே கவிதை என்பது என் திண்ணமான எண்ணம்.

  உள்ளுக்குள் ஊற்றெடுக்கும் உள்ளக் களிப்போ அல்லது எழுச்சிக் கொள்ள நம்பிக்கையூட்டும் கனலோ ஒரு கவிதையில் இருப்பின் அது காலம் கடந்தும் கொண்டாடப்படும்.

  உணர்ச்சிப் பெருக்கின், ஏகாந்தப் பொழுதின் கணங்களை மீண்டும் ஆன்ம நிலையில் தரிசித்துப் படைப்பாக்கித் தரும் கவிஞன் இதைத் தான் எழுத வேண்டும் எனச் சொல்வது ஏற்புடையதன்று.

  காதலையும் புரட்சியையும் எழுதியவனே இங்கு கவிஞனாகக் கொண்டாடப்படுகிறான்.

  காலம் கடந்து வரும் காதலும், காலத்தில் தோன்றிய புரட்சியும் கவிதையாகாமல் போனதில்லை.

  கவிஞன் காலத்தால் அடையாளப்படுத்தப்படட்டும்.

  கவிதையை ஏன் காலச் சிறைக்குள் சிக்க வைக்க வேண்டும்?

  எப்பொழுதும் எக்காலத்தும் யாவர் மன வானிலும் பறந்து திரியட்டும் கவிதைப் பறவை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s