Home

இலக்கியச் சுற்றம் என்ற இந்தப் பகுதியில் இலக்கிய படைப்பாளிகள் எழுதும் படைப்புகளை த் தொடர்ந்து பிரசுரம் செய்யலாம். ஒரு இலக்கிய இணைய இதழ் தொடங்க திட்டமிருக்கிறது. அந்த எண்ணத்தின் வெள்ளோட்டமாக இந்தப் பகுதியில் படைப்பாளிகளின் கவிதைகள்,சிறுகதைகள்,நாவலின் பகுதிகள்,விமர்சனங்கள்,மதிப்புரைகள்,விவாதங்கள்,உரையாடல்கள் ,மொழிபெயர்ப்புகள் இப்படிப் பல்வேறு விஷயங்களுக்கும் இடம் கொடுப்பதாகத் திட்டம்.

நண்பர்களைத் தொடர்ந்து பங்கேற்ப அன்போடு அழைக்கிறேன்.

தொடர்புக்கு

சிபிச்செல்வன்

 

 

 

 

 

 

 

892 555 44 67

sibichelvan@gmail.com

sibichelvanm@gmail.com

**

இந்த இதழின் முன்னோட்டமாக இலக்கியச் சுற்றித்தில் பங்கு பெறுபவர் கதிர்பாரதி. அவரின் ஐந்து கவிதைகள் இங்கே …

வாசியுங்கள்

நீங்களும் பங்கேற்கவும்.

•••

குடும்பப் புகைப்படம் 

ஒரு குடும்பப் புகைப்படத்தை நீங்கள் பார்க்கையில்

சுடர்விடும் அன்பைத் தரிசிக்கிறீர்கள் ஒரு முகத்தில்

வேறொன்றில் வெறுப்பு மின்னலென ஓடி மறைகிறது

மற்றொன்றில் சாந்தம் கொண்டலென வீசுகிறது

பிறிதொன்றில் அசூசையும் ஆற்றாமையும் வழிகிறது

தளிர்முகமொன்றில் தன் சல்லிவேருக்கு

பாசநீரைக் கேட்கும் யாசகம் தெரிகிறது

வயோதிகச் சுருக்கங்களில் காலம் சலசலத்துப் பிரவகிக்கிறது

எல்லாவற்றுக்கும் மேலாக சதியொன்றின் வடுவில்

தடுக்கி விழ நேர்கிறது

திடுக்கிட்டு மூடிவிட்ட புகைப்படத்தை

மீண்டுமொருமுறை எடுத்துப் பார்க்கிறீர்கள்

காற்றுக்கு அஞ்சி நடுங்குகிறது தீயின் நாவொன்று

பனியாலான குறுவாளொன்று குறிபார்க்கிறது

கரையறுக்கும் வெள்ளத்தில் கருவேலமொன்று சாய்கிறது

அறுவடைக்கு நிற்கும் நெல்வயலொன்றில் தீ பரவுகிறது

இறுதி நொடியிலிருக்கும் உயிரின் கரமொன்று

காற்றின் விழுதொன்றில் ஊசலாடுகிறது

யாவற்றையும் அவதானித்துவிட்டு

புகைப்படக் கலைஞனைப் பாராட்டக் கிளம்பும்

நீங்கள் மாபெரும் ரசிகன்

அவனைக் கொன்று திரும்பினால்

கடவுள்

வருந்தி சுமக்கிறவர்களின் ஹிட்லர்

ஆக…

ஹிட்லரின் அந்தபுரத்தை சமாதனத் தூதுவர் ஆக்கிரமித்துக்கொண்டார்.

அவனது காதலியையும் பணிப்பெண்களையும் எடுத்துக்கொண்டது

தூதுவரின் இச்சைக்காக என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.

மேலும், ஹிட்லரின் சிம்மாசனத்தை உதாசீனப்படுத்தி விட்டு

அந்தபுரத்தை ஆக்கிரமித்ததொன்றும் தற்செயல் நிகழ்வல்ல.

ஹிடலருக்கு ஆதரவாக எழுந்த நாவுகளைக் கொய்ததும்

அவனாற்றிய நலத்திட்டங்களின் பலன்களை எரித்ததும்

திட்டவட்டமாகத் திட்டமிட்டதுதான்.

வீதிகள்தோறும் நிறுவியிருந்த ஹிட்லரின் சிலையிலிருந்து

மீசையை மட்டும் சிராய்த்ததில்

சிலைகள் தூதுவரின் சாயல்கொண்டதே ஆக்கிரமிப்பின் உச்சம்.

விடிகாலை வீதியில் குழப்பத்தில் தவித்த

ஹிட்லரின் மக்களை நோக்கி

சமாதனத்தின் தூதுவர் பேசிக்கொண்டிருக்கிறார்.

வருந்திச் சுமக்கிறவர்களே சத்தியமாய் நம்புங்கள்

நான் சமாதனத் தூதுவர் அல்ல

ஹிட்லர்

ஒரு நாள் அந்த ரயிலில்

என் காதலை அனுப்பி வைத்தேன்

தளும்பிச் சிரித்தபடி ஊர்ந்துபோனது.

பிரிதொரு நாளில் புன்னகையைச்

சுமந்துபோன ரயிலுக்கு

எல்லா நிலையங்களும் பச்சைக்கொடியோடு

தாழ்ந்து பணிந்தன.

கையசைக்கும் சிறுமலர்கள் பயணிக்கும் பெட்டிக்கு

உற்சாகத்தைத் தெரிவித்துவிட்டு

வீடு திரும்பிய கணத்தில் புல்லரித்துப் பூத்திருந்த

செடியிலிருந்து ஒரு பூவைப் பறித்து

தனக்குச் சூடிக்கொண்டது அந்நாள்.

பார்வைகளும் பதட்டங்களும் பயணமான அன்று

ஒவ்வொரு நிலையத்திலும்

எதிர்படும் ரயில்களுக்குக் காத்திருந்து

வழிவிட்டுப் புழுங்கவேண்டி இருந்தது.

கணநேரத்தில் தவறவிட்ட ஒரு தினத்தில்

ரயிலைத் துரத்துக்கொண்டோடும்படி

கோபத்தையும் இயலாமையையும்

ஏவிவிட்டிருந்தபோதுதான்

விபத்தில் சிக்கி மரணித்தது.

என்னைக் கடந்துபோகிறவர்கள்

பெருமூச்சைச் சொரிந்தபடி

குழந்தைக்குக் கிசுகிசுக்கிறார்கள்

இவன்தான் ரயிலைக் கொன்றவன்

துளிர்ப்பு திகைந்தாயிற்று

வேம்பின் பொன்தளிர்களை
ஆராதிக்கத் துவங்கிவிட்டது கோடை
புளிப்பு சுவைகூட்டிய மாங்காயைக்
கடித்துவிட்டு மிழற்றுகிற கிளிக்காக
இதமிதமாய் பெய்யும் இனி புன்செய் வெயில்
ஊருக்குள் புகுந்து மாயமோகினியென
எழுந்து சுழலும் சூறைக்காற்றைத்
துரத்தியோடி களிப்பார்கள் சிறார்கள்
வாதநாராயணன் தன் சக்கரவடிவ பூக்களை
காற்றின் போக்கில் உதிர்த்து விளையாடும்
மகசூலை களஞ்சியத்தில் சேர்த்துவிட்டு
சோம்பித் திரிகிற குடியானவன் மீது
கொட்டிக் குளிர்விக்கும் பெருமழை
சோபிதம் கொண்டொளிரும் அந்தியிலிருந்து
அசைபோட்டபடி மந்தைக்குத் திரும்பும்
பசுவின் முதுகில் கொண்டலாத்தி குகுகுகுக்கும்
நல்லேர் பூட்டி தானியங்களைத் தூவிவிட்டு வந்து
அடுத்த வெள்ளாமைக்கு விதைநெல் பிரிக்கும்
நல்சகுனங்கள் நிரம்பிய இக்கோடையில்
நிகழாதிருந்திருக்கலாம் உன் பிரிவு

கிருஷ்ணாபுரத்து ரதியின்

திண்முலை குவிமையத்தில்

மூக்குரசி நைச்சியம் செய்கிறது

கரும்புக்காட்டிலிருந்து மன்மதன்

தூதனுப்பிய சிட்டொன்று.

புரிந்துகொண்டு

அபிநயிக்கும் பாவனையில்

மார்க்கச்சையை நெகிழவிடுகிற

ரதியிடம் பெற்றுக்கொள்ளுங்கள்

சிட்டுக்குருவி லேகியம்

இரு கார்காலத்துக்கு முன்பாக
தோட்டத்தில் ஊன்றிய வேம்பு
செழித்து வளரும் இந்தக் கோடையில்
நேற்றுக்கும் இன்றுக்குமாக
அலைந்துகொண்டிருக்கின்றன பிஞ்சுக்கிளைகள்
இன்றைத் துளைத்துக்கொண்டு
நாளைக்குள் ஊடுருவும் சல்லிவேரொன்றில்
அவள் பிரியத்தைச் சாய்க்கிறாள்.
ஏறுவெய்யில் நிலம் சலிக்கும் ஒரு முன்மாலையில்
பொன்மூக்குத்தி பூக்களால் சிரிக்கும்
வேம்பின் புண்ணியத்தில்
அத்தனை கசப்பாய் இல்லை
இந்தக் கோடை

Advertisements

One thought on “இலக்கியச் சுற்றம் – கவிதை – கதிர்பாரதி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s