Home

செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள் 

ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்

ஞாபகங்கள் இல்லாது
போகுமொரு நாளில்

நிறைய தொலைபேசி அழைப்புகள்
நீங்கள் யாரென்னும் கேள்வியோடு
நிராகரிக்கப்படலாம்.

நிலுவையில் இருக்கும்
நிறைய வழக்குகள்
தள்ளுபடி செய்யப்படலாம்.

நாளைய நம்பிக்கைககளின்
வேர்கள்
நடுக்கம் காணலாம்.

உறவுகளுக்குள்ளான
உறுதிமொழிகள்
உடனுக்குடன்
ஆவணப்படுத்தப்படலாம்.

பிறந்த நாள்
பிரிந்த நாள் உபசாரங்களெல்லாம்
ஒடுங்கியோ அல்லது
ஓய்ந்தோ போகலாம்.

அந்தந்த கணங்களில்
வாழ
அநேகம் பேர்
ஆயத்தமாகலாம்.

நிகழ் கணங்களை
உடனுக்குடன்
பதிவு செய்ய வேண்டிய
கட்டாயம்
கவிதைகளுக்கு நேரலாம்.

ஞாபகங்கள் இல்லாது
போகுமொரு நாளில்

நிறைய துரோகங்கள்
மன்னிக்கப்படலாம் அல்லது
மறக்கப்படலாம்.

o

எப்போதும் நம் வசமே

எப்போதும் நம் வசமே

கொடுக்கப்பட்டிருக்கிறது

ஏதொன்றையும்

தேர்ந்து கொள்ளும்

உரிமை

வயோதிக வயதில்

வாய்க்குமொரு

உத்தியோக உயர்வோ

கடும் முதுகு வலியோடான

கார் பயணமொன்றோ

முழுதும் படபடப்புடன்

மேற்கொள்ள நேரும்

ஒரு சுற்றுலாவோ

அமைதியற்ற மனதுடன்

கூடிய

ஷாப்பிங் நாளொன்றோ

சிற்சில

பிழைகளோடான

சீரிய கவலையேதுமற்ற

ஒரு வாழ்வோ

சின்னச் சின்ன

சண்டைகளுடனோ

விழுந்தெழுந்த சில

காதல் நினைவுகளுடனோ

தேர்வதில் நிகழும்

அத்தனை

சாதக பாதகங்களுடன்

ஏதொன்றையும்

தேர்ந்து கொள்ளும்

உரிமை

எப்போதும் நம் வசமே

கொடுக்கப்பட்டிருக்கிறது.

o

முன் முடிவுகளற்று இருப்பது

எப்போதாவது

என்றால் சரி.

எங்காவது ஒருமுறை

என்றால் சரி.

யாராவது ஒருமுறை

எனில் சரி

நடைபெற்ற யாவற்றிலும்

நாம் இருவருமே

பங்கு பெற்றிருக்க

பிரச்சினை என்றவுடன்

பின்வாங்கி நிற்கும்

உங்களிடம் பெரிதாய்

வருத்தமேதுமில்லை எனக்கு.

எதையுமே அறியாத

தோற்றம் தரும்

உங்களின் முகம் குறித்தும்

எனக்கு முழு சம்மதமே.

எல்லாப் பிரச்சனைக்கும்

என்னை நோக்கி நீளும்

உங்கள் கைகளைப் பற்றிக்

குலுக்க இப்பொழுதும்

எனக்கு சம்மதம்.

ஆயினும் ஒரு முடிவுக்கு

வந்தாக வேண்டும்

நான் இப்போது.

முடிவொன்று தேவையா

என்றாவது

முடிவு செய்ய வேண்டும்.

முன் செய்த முடிவுகளெல்லாம்

முடிவில் இப்படி எப்படியோ

ஆகிக்கொண்டிருக்க

முன் முடிவுகளற்று இருப்பதைப் பற்றி

முழு மூச்சாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

o

இன்னொரு சைக்கிள் ஒட்டியும் 
பின்னொரு சிறுவனும்

எதிர்க்காற்றில் மிதித்தபடி

அவசரமாய் போய்க்கொண்டிருந்த

அலுவலகப் பயணமொன்றில்

அதுவரைக்கும் ணா என்று

தாவி என் சைக்கிளின்

பின் சீட்டில் அமர்ந்த

பள்ளிச் சிறுவன்

பேச்சுவாக்கில்

ஏழாவது படிக்கும் தான்

பத்தாவதுக்குப்பின்

எப்படியும் போய்விடுவேன்

ஏதாவது ஒரு வேலைக்கு

என்றவுடன்

மேல படிக்கலாமில்ல
என்றேன்.

அது போதும்ணா
அப்பாம்மாவுக்கு
கஞ்சி ஊத்த என்றான்.

இன்னொரு சைக்கிள் ஒட்டியும்
பின்னொரு சிறுவனுமாய்
கண நேரக் காட்சி ஒன்று

கண் முன்னே வந்து போனது.

o

இலக்கியச் சுற்றம் என்ற இந்தப் பகுதியில் இலக்கிய படைப்பாளிகள் எழுதும் படைப்புகளை த் தொடர்ந்து பிரசுரம் செய்யலாம். ஒரு இலக்கிய இணைய இதழ் தொடங்க திட்டமிருக்கிறது. அந்த எண்ணத்தின் வெள்ளோட்டமாக இந்தப் பகுதியில் படைப்பாளிகளின் கவிதைகள்,சிறுகதைகள்,நாவலின் பகுதிகள்,விமர்சனங்கள்,மதிப்புரைகள்,விவாதங்கள்,உரையாடல்கள் ,மொழிபெயர்ப்புகள் இப்படிப் பல்வேறு விஷயங்களுக்கும் இடம் கொடுப்பதாகத் திட்டம்.

நண்பர்களைத் தொடர்ந்து பங்கேற்க அன்போடு அழைக்கிறேன்.

தொடர்புக்கு

சிபிச்செல்வன்

892 555 44 67

sibichelvan@gmail.com

sibichelvanm@gmail.com

•••

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s