Home

 

 

 

 

 

 

 

றியாஸ் குரானா கவிதைகள்

கலைக்கப்பட்ட கவிதை

கலைக்கப்பட்ட எனது கவிதைக்குள்
இப்போதுதான் மலர்ந்ததுபோல்
எஞ்சியிருந்த பூவொன்றை,
அதன் தாய்நிலமான மரத்தில்
இணைக்கப்போனபோதுதான்
அந்த அதிர்ச்சி நிகழ்ந்தது

எப்போதோ பூத்து
உதிர்ந்திருக்க வேண்டிய அல்லது
யாராவது பறித்திருக்க வேண்டிய இந்த மலரை,
தனது கிளையில்
இனிப் பூத்துக் காட்சிப்படுத்துவதற்கு
சம்மதிக்க முடியாதென்றது அந்த மரம்.

அது ஏன் என்பதை
பின்வருமாறு விளக்கலாம்.

கற்பனையை இரண்டாகப் பிரித்து
பங்குபோட வேண்டி வந்திருக்கிறது.
நேற்றுச் சந்தித்தவள்தான்
எனினும்,சமபாதி அவளுக்கும் வழங்க வேண்டும்
கற்பனையைப் பிரிக்கும் பொதுச் சுவரை
சொற்களை அடுக்கி கட்டமுடிவெடுத்தேன்

ஒரு பகுதிக்குள்ளிருப்பவருக்கு
மறு பகுதிக்குள்ளிருப்பவரின் நடமாட்டம்
அறியாமலிருக்கும்படி
பொதுச் சுவரின் சொற்களுக்குள்
அடர்த்தியான எல்லையற்று நீளும்
மௌனங்களை நிரப்பினேன்

அவர்களைத் தனித்தனியே
சந்திக்கக்கூடிய வகையில்,
ஒன்றிலிருந்து ஒன்று
முற்றிலும் வேறுபட்ட சூழல்களை
கற்பனையின் இரண்டு பகுதிக்குள்ளும்
மாறி மாறி  உற்பத்தி செய்தேன்

ஒரு கற்பனைக்குள்
அறவே பொருந்தாத,வித்தியாசமான
இருவேறு நிலவியலை கட்டமைப்பதும்,
அதற்காகக் கற்பனை செய்வதும்
பெரும் துயராக மாறத்தொடங்கியது

கற்பனையின் இருபகுதிக்குள்ளும்
தனித்தனியே வசிக்கும் அவர்களுக்கிடையில்,
சமநிலையைக் காப்பாற்ற முடியாது போகுமென
அஞ்சியபோதுதான்
நான் கடைசியாக எழுதிய
மஹா கவிதையைக் கலைத்தேன்

ஆக்குவது கடினம் அழிப்பது இலேசு
என்ற தத்துவம்
கவிதைக்குப் பொருந்தி வரவில்லை
எழுதுவதைவிட கவிதையைக் கலைப்பது
மிக மிகச் சிரமம் என்றறிந்தேன்

கவிதையைக் கலைக்கும்போது
ஏற்பட்ட ஒவ்வொரு தோல்வியின் போதும்
கவிஞனாக இருப்பதைவிட
வாசகராக இருப்பதன் துயரையும்
அசௌகரிகங்களையும் படிக்கத்தொடங்கினேன்.

முழுமையாக கற்பனை இருந்தபோது
எழுதப்பட்ட கவிதையை,
இரண்டாகப் பிரிக்கப்பட்ட
கற்பனைச் செயல்முறைகளால்
எப்படிக் கலைப்பதென்று புரியவில்லை
சொற்களை ஓரளவு கலைக்க முடிந்தது
தலைப்பைக் கலைத்துப் போடப்போட
வேறொரு தலைப்பாக மாறி,
முடிவற்ற அச்சுறுத்தலாக மாறியது

பெரும் யுத்தமொன்றில்
சிதைந்துபோன நகரமொன்றின்
இடிபாடுகளைப்போல
கற்பனை காட்சியளிக்கத் தொடங்கியது
அந்த இடிபாடுகளுக்கிடையிலும்,
சில கவிதைச் சம்பவங்கள்
ஆங்காங்கே மீதமாய்க் கிடந்தன
திடீரென ஏற்பட்ட இந்த அனர்த்தத்தை எதிர்பாராத,
கற்பனையின் இரு பகுதிக்குள்ளும்
குடியிருந்த அவர்கள் இருவரும்
மிரண்டுபோய் வெளியேறினர்

அவர்கள் போனால் என்ன
கலைக்கப்பட்ட கவிதைக்குள்ளிருந்த
அழகிய மலரையாவது
காப்பாற்றிவிடலாமென்று விரும்பினேன்.

காலைத் தேனீர்


காலாவதியாகிப்போன நாளொன்றின்
காலைப் பொழுதிற்காக
காத்திருக்கிறேன்.

கடந்தது மீள வராது

ஆயினும்
நான் சந்தித்தேயாக வேண்டும்

அந்திப் பொழுதிலிருந்து
பின்நோக்கி நடக்கிறேன்

அல்லது சிந்திக்கிறேன்

கொஞ்ச நேரம்
எதுவும் தெரியவேயில்லை

அது எனது பகல் தூக்கம்

பின்னோக்கி வருவதுபோல்
பாவனை செய்தபோதும்
திடுக்கிட்டு எழுந்துவிட்டேன்

;காரணம்

கனவில் அவள் தந்த கடிதத்தை
வாங்கிச் செல்கிறாள்

அதுபோல இருந்தது

அதுதான் நிகழ்ந்தது

பின்னோக்கி வரும்போது
தந்தது வாங்கியதாக மாறிவிடும் அல்லவா

மன்னியுங்கள்
மீண்டும் சிந்திக்கலாம்

உச்சி வெயில்

சூட்டை அதிகரிக்கும்
ஆடைகளை உடுத்துகிறேன்

நிலத்தினுள் இறங்கிவிட்ட,
நான் குளித்த நீரையெல்லாம்
கிணற்றுக்குள் ஊற்றுகிறேன்

தலைமயிர்களுக்குள் தங்கிய ஈரமும்
வடித்தெடுக்கப்படுகிறது

சந்தையிலிருந்த மிகவேகமாக
சைக்கிளை பின்நோக்கிச் செலுத்துகிறேன்

எல்லோரும் என்னை அதிசயமாகப் பார்த்தபடி
முன்னோக்கிச் சென்றுகொன்டிருக்கின்றனர்

ஏனெனில், அவர்கள்
கடந்துபோன காலைப்பொழுதை சந்திக்கும்
முயற்ச்சியில் இறங்கவில்லை

முதல்முறை சந்தைக்கு போகும்போது
நானும் அவனும்
அருகருகே பேசிக்கொண்டு போனோம்

இப்போது நாங்கள் தனியே பேசிக்கொண்டு
அவன் முன்னோக்கியும்
நான் பின்நோக்கியும் விரைகிறோம்

சரியாக வீட்டில் வந்து நின்றது

பறவைகளின் ஒலிகள்
வெளியில் பரபரப்பாக இருக்கின்றன

தற்போது காலைப்பொழுது

இனி முன்னோக்கிப் பயணிக்கலாம்

ஆவிபறக்க
தேனீர் அருந்திக் கொண்டிருக்கிறேன்

இந்தத் தேனீரைத்
தவறவிட்டதனால்,

ஒரு பகற்பொழுதை
முன்னோக்கியும் பின்னோக்கியும்
கடந்துசெல்ல வேண்டிவந்தது

இரண்டுமுறை.

தளம்பிய வாக்கியம்


மொழிபெயர்ப்பொன்றைச் செய்வதற்காக
கடந்த சில நாட்களாக இங்கு சந்திக்கிறோம்

இன்று கடைசி நாள்.

எண்ணங்கள் மாத்திரமே
பலிக்கும் ஓர் இடமாக
அது மாறியிருந்தது.

அந்த அறையில்,
மின் விசிறிகள் அசையவேயில்லை
மேசையின் மீது குவளையொன்று
தண்ணீரால் நிரம்பியிருந்தது
பங்கேற்கும் நாங்களும் இருக்கிறோம்

வழமைபோல் இல்லாமல்
எண்ணங்களாலே எதுவும் நடந்தன

எனது கழுத்தை நெரிக்கும்போது
திடுக்கிட்டெழுந்தேன்
என்னைக் கொல்வதுபோல் நினைத்தது
யாரென்று நான் விசாரிக்கவேயில்லை.

ஆறு சலசலப்பதைப்போன்று
பெரும் இரைச்சல் கேட்டது
எவரும் மேசையிலிருந்த குவளையைத்
திரும்பிப் பார்க்கவில்லை
எனக்கு மட்டும் கேட்கும்படி
யாரோ அந்தச் சத்தத்தை நினைத்திருக்க வேண்டும்

தண்ணீர்க் குவளையை உடைக்க
நினைவில் யாரும் முயற்சித்தால்,
அது நடந்துவிடக்கூடாது என்பதை
தொடர்ச்சியான எனது எண்ணமாக்கியிருந்தேன்

எனக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதை
குறிவைத்தோ அல்லது என்னைத் தவிர்த்தோ
சிலவற்றை சிலர்
அங்கு நினைத்து நடத்தியிருக்க வேண்டும்

ஏனெனில், சிலர் அண்ணார்ந்து
மின் விசிறிகளைப் பார்த்தனர்
எப்போதும் அசையாத மின்விசிறிகள்
அவர்களுக்கு வேகமாகச் சுழன்றபடி இருந்திருக்கலாம்.

தண்ணீர்க் குவளையைச் சிலர்
கல்லெறிந்து துரத்துகின்றனர்.
கண்ணுக்குத் தெரியாத கொக்கு ஒன்று
குவளையில் மீன் பிடிப்பதாக
யாரோ நினைத்திருக்கலாம்.
அதை மறுத்து,
அதைத் துரத்துவதாகவும் யாரோ எண்ணியிருக்கலாம்.

இப்படித்தானென்று
அறுதியிட்டுக் கூற முடியாவிட்டாலும்
இப்படியிருக்கலாமென்று யோசிக்கிறேன்

பெரும் மரண ஓலம்
அறைக்குள் வெள்ளம்
எல்லோரும் அதில் மூழ்கியபடியிருக்கிறோம்
நீந்திக் கரைசேர்ந்த ஒருவர்
தாளாத துயரத்தில் அழுதுகொண்டிருக்கின்றார்
இதை நினைத்தவர், தவறுதலாக நினைத்ததாகச் சொல்லி
அந்த நினைவை அழித்துவிட்டார்.

அப்படி எதுவும் நடக்கவில்லை
புன்னகையோடு பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

இதன் பின் அனைத்தும் வழமைபோல் மாறியிருந்தன

எண்ணங்கள் பலிக்கும் காலம்
முடிவடைந்திருக்கலாம்
ஏனெனில்,மின் விசிறிகள் சுழலாத அறையில்
மேசையின் மீதிருந்த குவளையில்
தண்ணீர் தளம்பிக்கொண்டிருந்தது என்ற வாக்கியத்தை
மொழிபெயர்க்க முடியவில்லை என்று
எல்லோரும் அதன் கீழ் கையெழுத்திட்டிருந்தோம்.

***

இலக்கியச் சுற்றம் என்ற இந்தப் பகுதியில் இலக்கிய படைப்பாளிகள் எழுதும் படைப்புகளை த் தொடர்ந்து பிரசுரம் செய்யலாம். ஒரு இலக்கிய இணைய இதழ் தொடங்க திட்டமிருக்கிறது. அந்த எண்ணத்தின் வெள்ளோட்டமாக இந்தப் பகுதியில் படைப்பாளிகளின் கவிதைகள்,சிறுகதைகள்,நாவலின் பகுதிகள்,விமர்சனங்கள்,மதிப்புரைகள்,விவாதங்கள்,உரையாடல்கள் ,மொழிபெயர்ப்புகள் இப்படிப் பல்வேறு விஷயங்களுக்கும் இடம் கொடுப்பதாகத் திட்டம்.

நண்பர்களைத் தொடர்ந்து பங்கேற்க அன்போடு அழைக்கிறேன்.

தொடர்புக்கு

 

சிபிச்செல்வன்

 

892 555 44 67

 

sibichelvan@gmail.com

sibichelvanm@gmail.com

•••

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s