Home

 

 

கட்டுரை

சமயவேல்.

 


 

   

 

                    மௌனத்தில் ஊறி வெடிக்கும்

                                 சாகிப்கிரானின் வண்ணச் சிதைவு

 

 

உச்சபட்ச வலியின் புறத்தே மரணச் சுழலுக்கு வெகு அருகில் மௌனமாய் வாழ்வைத் தொடர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மென்னுயிர் ஸ்படிகங்களை ஊடுருவும் வாழ்வின் வண்ணக் கற்றைகள் தங்களது வேறுபட்ட அதிர்வெண்களால் வெவ்வேறு கோணங்களில் சிதறுண்டு போவதையும் அவை இத் தொகுப்பின் கவிதைகளாக உருக்கொள்வதையும் பார்க்கிறோம். ஒளிச் சேர்க்கை/ஒளி விலகல்/வண்ணச் சிதைவு என்று, சி.மணியின் குகையிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டிருக்கும் இந்தக் கவிதைகள், ‘வரும் போகும்’ என்னும் நித்ய நிகழ்வினுள் எல்லாத் தமிழ்க் கவிதைகளோடு இவைகளும் அடங்கிக்கொள்வதில் வியப்பில்லை..

“எதுவும் இல்லாமலும்

இல்லை என்பதுவும் இல்லாமலும்

இடைச்சுவர் நொறுக்கிக் கொள்ளும்

கதி.”

 

இதுதான் சாகிப்கிரான். சி.மணியின் சேலத்துக்கும் நகுலனின் திருவனந்தபுரம் கௌடியார் மடத்திற்கும் நடுவில் எந்தச் சுவரும் இல்லை. சூரியனும் நானும் என்ற இந்தச் சிறுகவிதை எவ்வளவு அற்புதம். உள்ளறைக் கதவிலிருந்து வீழ்ந்த சூரியவில்லையை ஒளியுறுப்பு என்கிறார். அதை மிதித்த/அது மிதித்த ஒரு கணத்தை யுகம் என்கிறார். சூரியனோடு இணைய நேர்ந்த இந்தக்கணம் கூட இப்படி ஆகிவிட்ட விசாரம், தாங்க முடியாததாக இருக்கிறது. வண்ணச் சிதைவு வானவில்லாகவும் மாறும் சாத்யம் சாகிப்கிரானின் கவிப்பரப்பில் எங்கும் இருக்கப்போவதில்லையோ என்னும் அச்சம் என்னைப் பீடிக்கிறது. அச்சத்தின் கரைகளில் முதிர்ந்த மௌனங்களோடும் திறப்புகளற்ற மூடிய விழிகளோடும் ஆனால் அதீதப் பிரக்ஞையின் விழிப்புடனும் சொற்களைக் கூட்டிக்கொண்டு மெல்ல மெல்ல கவிதைகள் ஒவ்வொன்றாய் முளைக்கின்றன. இயங்காப் பொழுதுகளில் நிச்சலனம் எய்தும் இருண்மையின் கண்கள் எல்லாக் கவிதை வரிகளிலும் முளைக்க எத்தனிக்கின்றன. கவிதையின் சவாலென முளைக்கும் இக்கண்களை சாகிப்கிரான் மிக எளிதாக வசப்படுத்திவிடுகிறார்.

 

‘கைவிடப்பட்ட ஒரு பருவம்’ கவிதையில் சாகிப்கிரானின் முழுச்சித்திரமும் பெரும் வலிமிகுந்த சொற்களாக விரிகின்றன. இந்தத் தொகுப்பின் எல்லாக் கவிதைகளின் அடிக்கட்டுமானம் என்றும் இந்தக் கவிதையைக் கூறலாம்.

கட்டில் தளர்த்தியக்

கயிற்றுக் குழியுள்

வீங்கி உடையும்

விழைதல் யாவும்

படுக்கைக் கொப்புளங்கள்

உதிரப் பார்க்கும் முதிர்ந்த

உயிர்மூல வலைபின்னலின்

வேதனைப் பாதையெங்கும்

முறுக்கிக் கொல்லும்

வலியின் இழை….

 

கொல்லும் வலியை ‘இழை’ என்று யாராவது எழுத முடியுமா? அதை, அந்த வலியை முழுவதுவமாக ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே இப்படி எழுத முடியும். இது போலவே இன்னொரு வலியில் புரளும் கவிதை “இரண்டாவது கண்ணாடியும் உடைந்துள்ளது” அம்மாவோடு இந்தக் கவிதையை வாசிப்பவர்களின் மனமும் கழுவப்படும் என்று நம்புகிறேன்.

 

இப்படி சாகிப்கிரானுக்கு எல்லாவற்றையும் மௌனமாய் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எப்படிக் கிடைத்ததெனத் தெரியவில்லை. ஒரு கவிதையில் எப்பொழுதுமே முழுதும் பார்க்க முடியாத நிலவு பற்றி எழுத நேர்ந்துவிட்டது பற்றி இவரால் வருத்தம் கொள்ள மட்டுமே முடிகிறது. அன்பின் கோரைப் பற்களில் ஒன்று உடைந்திருப்ப்து தெரிந்திருப்பினும் அந்தப் பில்லியை இவர் நேசிக்கவே முடிகிறது. “வெறுமையைக் காய்க்கிற தாவரம் கல்மரம்” என்று போகிற போக்கில் எழுதிச் செல்கிறார். எதன் மீதுமான அதீத பற்றுதலோ ரொமாண்டிசமோ கூட அற்ற சாகிப்கிரானின் குரல் தமிழில் இன்னும் பதியப்படாத ஒரு அசலான பௌத்தக் குரலாக இருக்கிறது.

கக்கூஸ் குழியினுள்

வீழ்ந்திடுமோ

விரையும் என்

வியப்பு நிலா

என்று முடியும் கவிதைக்கு ‘அழகு’ என்று தலைப்பிட்டுருக்கிறார். ரொமான்டிஸசம் தகர்க்கும் இந்தக் கவிதை சிறந்த கவிதையாகவும் அமைந்துவிட்டது.

 

“பாசி தவிர்த்தப் படிகளில்

சிதறிய மல்லிகள் மட்டும்”

எப்படி இவரது கண்களில் மட்டும் படுகிறதெனத் தெரியவில்லை. படித்துறையில் எதையெதையோ பார்த்த தமிழ்ச் சமூகத்தில் இப்படியும் ஒரு கவிஞனா என்று வியப்புற முடியாதபடி நம்மையும் துக்கத்தில் ஆழ்த்துகிறது இவரது குரல்.

 

சகலமும் கண்டார்

சலனமற்றதொரு குளத்தில்

என் முகம் தெளியும் போது.

 

எவர்தான் காண்பார்

மின்னல்?

இன்னொரு கவிதையில் இவரும் அந்த்வான் எக்சுபரியின் குட்டி இளவரசனும் சேர்ந்து கண்டுபிடிக்கிறார்கள் ‘தொலைப்பே தேடலின் எச்சம்’ என்பதை. அந்த்வான் எக்சுபரியின் குட்டி இளவரசன் போலவேதான் இவரும் இருக்கிறார்.

 

வாழ்வின் இறுதி நெருக்கடிகளைத் தொட்டுவிடும் கீழைத்தேய மனிதன் ஒருவன் ஆன்மீகத்தின் கரைகளில் ஒதுங்குவதென்பது சர்வ நிச்சயம் என்பதை சாகிப்கிரானும் நிரூபித்துவிடுகிறார். முதலில் ‘போதி’ என்னும் கவிதையைப் பார்க்கலாம்.

 

“இறப்பு கடந்த ஒரு உன்னத நினைப்பில்

காலங்கள் ஒட்டிக் கொண்ட வெளிகளை

உதறும் நினைவுச் சிற்பங்கள்

சிதறி நிற்கும் ஜோடனையில்

கடவுள் புகுந்து அமர்ந்து கொண்டால்

எப்படித் தொலைப்பேன்

என்னை?”

 

ஆன்மிகப் பாதாளங்களில் தள்ளப்படும் கீழைத்தேய மனிதன் முதலில் கடவுளைத் தூக்கி வெளியே எறிய வேண்டியிருப்பதை அனுபவம் சார்ந்து வெளிப்படுத்தும் இந்தக் கவிதை, தத்துவத்தின் நுட்பமானதொரு பிரச்னையை மிக எளிதில் தீர்த்துவிடுகிறது. ‘தேட்டை” கவிதையில் ஒரு பூனையும் இவரும் ஒருவரையொருவர் கண்கள் கலக்காமல் பார்த்தபடி ஸ்தம்பித்து நிற்கிறார்கள். ஸ்தம்பித கணத்தில் நிகழும் யுகாந்த்ர அணுப்பிளப்பில் மரமும் பூனையும் மறைந்துவிடுகின்றன. ஆலிஸ்ஸின் பூனையோடு சேர்ந்து மரமும் மறைந்துவிடுகிறது. அங்கிங்கெனாதபடி எங்கும் கடவுளற்ற புறவுலகம் மறைந்துவிடும் அனுபூதிநிலையை கவிப்பொழுது மிக எளிதாக எட்டிவிடுகிறது. ‘பிறகு/திறக்க முடியாத/ஜன்னல்களைக் கண்டேன்: எனத்தொடங்கும் ‘முக்தி’ கவிதையில் ஒருமுழுமுற்றான ஆன்மீக மலர் ‘மூடிக் கிடந்த மலை உச்சியில்’ கிடப்பதைக் கண்டுபிடிக்கிறது. தமிழின் முழுமுற்றான பௌத்தக் கவிதை என்று இதைக் கூறலாம். தமிழில் நேரடியாக ஜென் கவிதைகளை எழுத விரும்பும் நண்பர்கள் சாகிப்கிரானின் இத்தொகுப்பை முதலில் படிக்க வேண்டும். அதற்கும் முதலாக அவரது  வாழ்வின் வலி முழுவதையும் வாங்கிக்கொள்ள வேண்டும். முயற்சி செய்து பாருங்கள்.

 

இந்த பௌத்தக் கவிஞர் சமூகம் பற்றி எதுவும் எழுதவில்லை என்று நினைக்க வேண்டாம். வாழ்வின் அகமுகத்தின் ஆணிவேர்களும் சல்லிவேர்களும் பருகும் நீர் சமுதாயக் கிணற்று நீர் என்பதுதான் நம் காலத்தின் துக்கம் என்பேன். ஆதி சமூகத்தில் அந்த வேர்கள் மலயூற்றுகளிலும் நதிதீரங்களிலும் காடுகளின் ஊருணிகளிலும் இருந்திருக்கக் கூடும். ஆனால் இன்றைய நவீன விருட்சம் எப்படி இருக்கிறதாம்? “குட்டை விழுதுகளுடன்/ விருட்சமாய்/ எழுந்து நிற்கும்/ பப்பாளிமரம்” அந்த மரத்தின் நிழலில் நின்று பார்த்தால் கட்சிக் கொடிக்கம்பங்களின் வரிசையாம். கடைசியில் ‘பக்கத்து வீட்டு செப்டிக் டேங்கின்/ உயர்ந்ததொரு காற்றுப்போக்கி.” நாம் நமது படைப்பென ஒரு செப்டிக் டேங்கின் காற்றுப்போக்கியைக் குறித்து மகிழ்வதைத் தவிர வேறு வழியில்லை.

பிரிதொரு நாள்

அயல் தேசத்து

ஆயுதக் கிடங்கெங்கும்

ஆயுதங்களுக்கு மாற்றாக

பூக்கள்

நிரம்பிக் கிடக்க

சர்வதேச சபைகள்

அம்மனுக்கு பூ

மிதித்துச் சென்றன.

யுத்தமும் ராணுவமும் அற்ற நாடுகளை கவிஞனின் நாடுகள் எனலாம். உலக நாடுகள் எல்லாம் கூடி ஒரு குறிப்பிட்ட தேதியில் தங்கள் இராணுவங்களைக் களைத்துவிட்டால் என்ன? என்று நண்பர்கள் சிலரிடம் கேட்டு “சரியான கிறுக்கு” பட்டம் வாங்கியிருக்கிறேன்.

 

இந்த வகையில் ‘அசரீரி கட்டமைக்கும் சமூகத்திற்கான மதிப்புரை” என்னும் நீள்கவிதை மிக்சிறந்த மதிப்புரையை வைக்கிறது. பழத்தைப் பகிர்ந்துண்டால் பழத்தின் பலன் கிட்டாது என்னும் மதவாத அசரீரி கேட்டவுடன் இவரது அறை மாநரியல் இருப்பாக மாறிவிடுகிறது. நகரின் எல்லாப் பிரஜைகளையும் போலவே இவரும் பழத்தைக் கைப்பற்றிவிடுகிறார்

 

“கத்தி போன்ற ஸ்பூனைக்கொண்டு

ஜீராவுடன், மதுவுடன்,

துரோகத்துடன், கயமையுடன்

பழக்கத்தின்

மிகத் தேர்ந்த பாவனையுடன்

படைப்பின் மென்மையைத்

தின்று கொண்டிருக்கிறது

நகரம்.”

நகரம் பற்றிய அரிதான நல்ல கவிதைகளில் இதுவும் ஒன்றாகிவிடுகிறது.

 

வண்ணச் சிதைவு வானவில்லாக மாறும் கவிதயை சி.மணிக்கே சமர்ப்பணம் செய்திருப்பது மிகப் பொருத்தமாக இருக்கிறது. இந்தக் கவிதையை முழுவதுமாக வாசித்துவிட்டு இந்த நூல் மதிப்புரையை முடித்துக் கொள்கிறேன்.

 

கடைசியில்

 

கேட்கவுமில்லை நான்

சொல்லவுமில்லை நீ

 

கடைசியில்

எல்லாமே கூடிவிட்டது

 

மரணம்

நீ

குழந்தை

நான்

 

பிரபஞ்சத்தின் எங்கோ

கசக்கப்படும்

ஒற்றை மலரின்

மணமும் நிறமும்

நிரந்தரமடைந்தவை.

 

இதோ

வானவில் அவற்றை

அரை வட்டமாய் தீட்டியபடியே

இருக்கிறது.

 

(சி.மணியின் நீங்கா நினைவிற்கு)

 

சென்ற ஆண்டு நான் படித்த ஜேன் கிர்ஷ்பீல்டு என்னும் ஜென் கவியின் கவிதைகளைப் போன்றே சொல்லமைவுகளும் வாக்கியத் தொடரியல்களும் மேலும் உள்ளடக்கமும் இருந்த்து தற்செயலானதொரு ஆனந்தம் என்றே கருதுகிறேன்.

 

மதுரை                                        08-04-2012                                        

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s