Home

தோற்பதற்கான வாய்ப்புகளைத் தெரிந்து கொள்வதற்காக…

                  • மதிகண்ணன்

ஒவ்வொருவரின் வாழ்விலும் அவர்களின் பல்வேறு அனுபவங்கள் உணர்வு மயமானவை. அவற்றை அனைவரும் பதிவு செய்வதில்லை. பதிவு செய்பவர்களும்கூட தனக்குச் சாதகமானவற்றை மட்டுமே பதிவு செய்திருக்கிறார்கள். தன்னுடைய வாழ்வினை எழுதிச்செல்லும்போது, தன்னுடைய ஏடாகூடங்களைப் பதிவு செய்வதுகூடத் தன்னுடைய நேர்மையைப் பறைசாற்றக்கூடிய, தனக்குச் சாதகமான ஒன்றாகவே இதுநாள்வரை பதிவாளர்கள் செய்திருக்கிறார்கள்.

தனக்கான அனுபவங்கள் வாயிலாக அனுபவக்கால சமூகத்தின் சூழலைப் பிரதிபலிப்பது என்பதும், தான் இருந்த சூழலின் சமூகத்தைப் பிரதிபலிப்பது என்பதும் – எல்லோருக்கும் வாய்க்கப் பெறுவதில்லை. அல்லது அப்படியான உணர்வு அவர்களிடத்து இல்லை. தான் இருந்த சூழலின் தனித்துவமான சமூகத்தை அந்தச் சூழலுக்குக் காரணமான இடம், சமூகநிலையின் தனித்துவத்தைப் பெற்றிருந்தாலும் தன்பார்வையினை துணிச்சலாகப் பதிவு செய்திருக்கிறார் B.R.மகாதேவன். ‘சில தனிமனிதர்களின் விழுமியங்கள் அவர்களின் கூட்டு முயற்சியின் வாயிலாக அமைப்பு மதிப்பீடுகளாக மாறுகின்றன. அமைப்புகள் தம்மை சட்டங்களுக்கு உட்படுத்திக் கொள்ளுகையில் அவற்றின் மதிப்பீடுகள், விதிகளாக மாறுகின்றன. அமைப்பு ‘நிறுவன’மாகி விடுகிறது. இந்த நிறுவன விதிகள், நிறுவனம் உருவாகக் காரணமாக இருந்த தனிநபர்களின் விழுமியங்களுக்கும்கூட பலநேரங்களில் பாரதூரமானைகளாக மாறிப் போகின்றன. இது நிறுவனமாதல் ஒழுங்கில் தவிர்க்க முடியாததாகிறது. ஆனால் அவற்றை அதன் உள்ளே சுய சிந்தனையுடன் இருப்பவர்கள் மட்டுமே உணர முடியும். வெளியில் இருப்பவர்களால் அவதாணிக்க முடியாது.‘ சுய சிந்தனையுள்ள தான் உணர்ந்த உண்மைகளை B.R.மகாதேவன் நேர்மையாகப் பதிவு செய்த தன்னனுபவப் பதிவு நூல் ‘புல்வெளியைத் தேடி’.

‘ஆம் நண்பர்களே அதுதான் நடந்தது’ என்ற கவிதைத் தொகுப்பின் வழி தமிழிலக்கியப் பரப்பிற்கு அறிமுகமான B.R.மகாதேவன் குறும்படம், ஆவனப்படம், மாற்றுத் திரைப்படம் போன்ற முயற்சிகளில் தற்சமயம் ஈடுபட்டு உள்ளார் என நினைக்கிறேன்.

‘சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சிலகுறிப்புகள்’ முதல்வாசிப்பில் சமூகம் சார்ந்த தன்னுடைய விமர்சனப் பார்வையை கூர்மைப்படுத்திக் கொண்டு, டோட்டோசானைப் படித்து அதில் முன்வைக்கப்பட்ட மாற்றுக் கல்விமுறையினால் பாதிப்பிற்கு உள்ளானதாகச் சொல்கிறார் B.R.மகாதேவன். இந்தியாவில் எங்கெல்லாம் மாற்றுக் கல்வி முறை அமலில் இருக்கிறதோ அங்கெல்லாம் போய்த் தகவல்களைச் சேகரித்து பெற்றோர்களின் தவறான வழிகாட்டுதல்கள் இல்லாத சிறுவர்கள் மத்தியில் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என மனதில் திட்டம் தீட்டிக் கொள்கிறார். தமிழ்நாட்டில் பலருக்கும் இருப்பதுபோல் கல்வியை ‘ஒருவழி‘பண்ணுகின்ற திட்டம் இவருக்கும் இருந்திருக்கிறது. நல்ல வேளையாக இவர் கல்வியை ‘ஒருவழி‘ பண்ணுவதற்கு முன்னர் தன்னைத் அதற்குத் தகுதியானவராக மாற்றிக் கொள்ள, முதலில் தன்னை ‘ஒருவழி‘ பண்ணிக் கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்திருந்தார்.

இந்தியா ஒரு ஆன்மீக பூமியென்றும் எந்தச் சீர்திருத்தத்தையும் ஆன்மீக முறை சார்ந்தே இங்கு செயல்படுத்த முடியுமென்றும் சொல்லப்பட்டதை ஏற்றுக்கொண்டு இந்தியாவில் அம்முறையில் செயல்பட்ட ஆன்மீகவாதிகளான அரவிந்தர், விவேகானந்தர், ஜே.கிருஷ்ணமூர்த்தி, தாகூர் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட கல்வி முறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிவு செய்கிறார். முதலில் கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்த கேந்திரத்தில் போய்ச்சேருகிறார். கன்னியாகுமரிப் பகுதியில் வழக்கமான பிரதான நீரோட்டக் கல்வி முறையே கேந்திரத்தால் நடத்தப்பெறுவதாகவும், கல்வி முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு வாய்ப்பான கல்வி முறையான, குருகுலக் கல்விமுறை, இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறுவதாகவும் வழிகாட்டப்பட்டு, அவர் அருணாசலப் பிரதேசத்திற்கு பயணமாகிறார்.

அங்கு அவர் கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்படவில்லை. மாறாக முதலில் மருத்துவ முகாம்கள் ஒருங்கிணைப்பாளராகவும், பின்னர் சிவாலயக் கட்டுமாணப் பொறுப்பாளராகவும் பணி ஏவப்படுகிறார். அங்கு சென்று நீண்ட நாட்களுக்குப் பின்னரே கன்னியாகுமரி நடைமுறையிலிருந்தும், பொறுப்பாளர்களிருந்தும் அருணாசலப் பிரதேசம் மிகவும் வேறுபட்டிருப்பதை அவரால் உணரமுடிகிறது.

அருணாசலப் பிரதேசத்தில் B.R.மகாதேவனின் பொறுப்பில் விடப்பட்டிருந்த மாவட்டத்தின் கிராமங்களில் மருத்துவ முகாம்களை அவர் ஆரம்பித்தபோது, கிடைக்கும் நன்கொடைகளைக் கொண்டு எல்லா கிராமங்களிலும் இலவச சிகிச்சை அளிக்க முடியாது என்று சொல்லி சில கிராமங்களை பட்டியலிலிருந்து நீக்குகிறார்கள். அதில் பெரும்பாண்மையானவை கிருஸ்தவர்கள் அதிகமாக இருந்த கிராமங்கள். இது அருணாசலப் பிரதேசத்தின் நிலை. இப்படியான பார்வைகள் கன்னியாகுமரியில் பெருமளவிற்கு இல்லை என்கிறார்.

விவேகானந்தர் கன்னியாகுமரிக்கு வந்தபோது, இப்போது அவருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டிருக்கும் பாறையில், பார்வதி தேவியின் காலடித்தடம் இருப்பதைக் கேள்விப்பப்பட்டதும், ஆர்வ மிகுதியால் நீந்தியே அந்தப் பாறைக்குச் சென்றிருக்கிறார். இதை ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்த ஒருவர் பேச்சு வாக்கில், “அன்றிருந்த கரையோர மீனவர்கள் கிருஸ்தவர்களா இருந்ததால் விவேகானந்தரை அந்தப் பாறைக்குக் கொண்டு செல்ல மறுத்துவிட்டிருப்பார்கள். எனவே அவருக்கு நீந்திப்போக வேண்டி வந்திருக்கலாம்” என்கிறார். இதைக் கேட்ட விவேகானந்த கேந்திர நிர்வாகி “அது உண்மையல்ல. அப்படியே உண்மையாக இருந்தாலும், பிறர் மீது வெறுப்பைத் தூண்டும் ‘உண்மைகளை’ மறைத்து விடுவது நல்லது” என்கிறார். இதுதான் கன்னியாகுமரியின் நிலை.

அருணாசலப் பிரதேசத்தில் கண்சிகிச்சை முகாம் நடைபெறும் இடத்தில் ஒரு பெண்ணைப் பார்க்கிறார். அவளை இவருக்குப் பிடித்துப் போகிறது, பின்னர் இவருடைய பணி சிவாலயம் கட்டுமிடத்திற்கு மாற்றப்பட்ட நாளில் ஆலங்கட்டி மழையில் விளையாடும் அவளை அந்தக் கிராமத்தில் மீண்டும் பார்க்கிறார். அவளுடனான இவருடைய பழக்கம், நட்பு அடுத்த கட்டத்தை அடைகிறது. அவள் அருணாசலப் பிரதேசத்தின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த, ஓரளவு படித்த பெண்ணாகவும்,  முழுமையான பாலியல் சுதந்திரம் கொண்டவளாகவும்  இருக்கிறாள். இவரைப் பொறுத்தவரை பாலியல் சுதந்திரம், ‘ஒரு காலத்திற்கு ஒருவருடன் மட்டுமே உறவு ; அப்புறம் வெட்டி விட்டு அடுத்தவருடன் ; அப்புறம் அதையும் வெட்டி விட்டு மீண்டும் வேறொருவருடன்‘ என்கிற பெருந்தன்மை கொண்டதாக இருக்கிறது. மொத்தத்தில் அவள் இவருடன் பழகும்போது வேறு எந்த ஆணுடனும் பழக்கம் வைத்துக் கொள்ளக்கூடாது, இவர் போனபிறகு அவள் யாருடன் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானலும் இருந்து கொள்ளலாம் என்கிற அளவில் பரந்த சமூகப் பார்வை கொண்டது இவருடைய பாலியல் சுதந்திரக் கொள்கை. ஆனால், அவள் அப்படி இல்லை. அவளை இவர் உட்பட பலர் காதலித்தார்கள். அவளும் இவர் உட்பட பலரைக் காதலித்ததால். தினம் ஒரு வீட்டில் இரவு தங்குபவள். தங்கிய வீட்டில் மீண்டும் தங்குவதற்கும் அவளுக்கு எந்த மனத்தடையும் இருந்ததில்லை. இவரே ஒரு முறை அவளை வீடுவீடாகத் தேடி ஒரு வீட்டில் கண்டுபிடித்து, அவளுடன் கோபித்துக் கொண்டு போன வேலையைப் பார்க்காமல் இரவோடிரவாக காட்டு வழியில் தனித்துத் திரும்பத் துணிகிறார். அவளை வரம்பு மீறுபவள் என இவர் ஒவ்வொரு முறை உணரும்போதும், தான் வரம்பற்றவள் என்பதை அவள் உணர்த்த முயற்சிக்கிறாள். இந்தப் போராட்டத்தில் இவர்களிடையே கூடலைவிட ஊடலே ஆதிக்கம் செலுத்துகிறது.

நிறுவன ஓழுங்கை பெண் விஷயத்தில் கடைப்பிடிக்காததற்காக இவரை விசாரித்து சிறு இடமாற்றம் என ஒருகடிதம் கொடுத்து, கன்னியாகுமரிக்கு டிக்கெட் கொடுத்து அனுப்பிவிடுகிறார்கள். டிக்கெட்டைப் பார்க்கும்வரை இவருக்கும் தெரியாது இந்தச் சிறு இடமாற்றம் கன்னியாகுமரிக்கு என்பது. ஒரு வழியாக அருணாசலப் பிரதேசத்தில் இவருடைய கல்வி தொடர்பான கற்றலும், நடைமுறைப்படுத்தலும் இப்படியாக ஒரு முடிவுக்கு வருகிறது.

மீண்டும் கன்னியாகுமரி வந்தபின் தலைமைத் துறவியின் ஆலோசனையின்படி விவேகானந்த கேந்திராவில் இருந்து வெளியேறி பாண்டிச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமத்திற்குச் செல்ல முடிவு செய்கிறார். இடையில் சிலநாட்கள் சொந்த ஊரில், சொந்த வீட்டில் இருக்க நினைத்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு இரவோடிரவாக வீட்டை வந்தடைகிறார்.

சொந்த ஊரில் இவருக்கு பிரச்சனை வேறொரு ரூபத்தில் காத்திருந்தது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் காதலித்த இரண்டு வீடு தள்ளி குடியிருந்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடியாததால் இவர் சாமியாராகப் போய்விட்டதாக ஊரே நம்பிக்கொண்டிருந்தது. அருணாசலப் பிரதேசத்தில் இருந்த இரண்டு ஆண்டுகளாக இவர் வீட்டிற்குக்கூட சரிவரி கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்ளவில்லை. அந்தப் பெண்ணிற்குத் திருமணமான விஷயமே இவருக்கு ஊருக்கு வந்தபிறகுதான் தெரியும். ஆனால், இவர் அந்தப் பெண்ணின் திருமணத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்ததாகவும் பலர் நம்பிக் கொண்டிருந்தார்கள். தன் மீதான எவருடைய பார்வையும் ஏளனப் பார்வையாகவே இவருக்குப்படுகிறது. சொந்த ஊர் துறந்து அடுத்த பயணமாக பாண்டிச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமம் செல்கிறார்.

அரவிந்தர் ஆஸ்ரமத்தில் நடைமுறைப்படுத்தப்படும் கல்விமுறை இவருக்குச் சரியான ஒன்றாகப்படுகிறது. அங்கு தங்கியிருந்து கல்வி தொடர்பான அங்குள்ள விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். அரவிந்தர் ஆஸ்ரமம் சார்பில் அச்சுக்கூடம், மருத்துவப் பிரிவு, விவசாயப் பிரிவு என பல பிரிவுகள் இருந்தன. அவற்றில் ஏதாவது ஒன்றில் சேர்ந்து கொண்டு கல்வி முகாம்கள் நடக்கும்போது அதில் பங்கேற்கலாம் என நிறுவனத்தினர் அவருக்கு ஆலோசனை கூறிகின்றனர். அதனை ஏற்று ஏரிக்கரையில் ரம்யமான சூழ்நிலையில் அமைந்திருக்கும் விவசாயப் பிரிவை தனக்கான இடமாகத் தேர்ந்தெடுக்கிறார். உடல் உழைப்பாளிகளின் பாடு, அவர்கள் பெறும் கூலி, அவர்களின் சமூகநிலை, அவர்களுக்குக் கிடைக்கும் மருத்துவவசதி போன்றவை அரவிந்தரின் சீடர்களால் நடத்தப்பெறும் நிறுவனத்திலும் இருக்கக்கூடிய ஏற்றத் தாழ்வுகளை இவருக்குக் காட்டுகின்றன. மாடு முட்டித் தூக்கிப்போட்டதில் நெஞ்சில் உள்காயம்பட்ட வயதான ஒரு விவசாயக் கூலிக்காரருக்கு ஒரு எக்ஸ்ரே எடுக்கக்கூட ஏற்பாடு செய்யாமல், சிறிது நேரம் ஓய்வும், வீட்டிற்குச் சென்று ஒத்தடம் கொடுக்கச் சொல்லி ஆலோசனையும், நாளைக்கு வேலைக்கு வந்து விடவேண்டும் என்ற கட்டளையும் மட்டுமே கிடைத்தது என்பதைக் கண் முன் காணும்போது இவருக்கும் நெஞ்சுக்குள் உள்காயம்படுகிறது. இந்தக் காயம் அவரை வெகுவாகத் தொந்தரவு செய்கிறது. தொந்தரவின் வெளிப்பாடாக நிர்வாகக் கூட்டத்தில் இவர் இந்தச் சம்பவம் பற்றிய தன்னுடைய முரண்பாட்டைப் பதிவு செய்கிறார். முரண்பாட்டின் எதிர்வினையாக “யார் யாரை எப்படி நடத்த வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். அவரவருக்குத் தரப்பட்ட பணியை மட்டும் அவரவர் செய்து வந்தால் எல்லோருக்கும் நல்லது” என தலைமை நிர்வாகியால் மென்மையான குரலில் எச்சரிக்கை செய்யப்படுகிறார். அதன் பின்னரும் நடந்த இதுபோன்ற சம்பவங்களால், இவருக்கும் நிர்வாகத்தினருக்குமிடையிலான உறவு மோசமடைகிறது. ஒரு அதிகாலைப் பொழுதில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அவர் அங்கிருந்து வெளியேறுவதுடன் அரவிந்தர் ஆஸ்ரமத்தில் இவருடைய கல்வி ஆராய்ச்சிப் பணி ஒரு முடிவுக்கு வருகிறது.

பேருந்தில் பாதியும், நடந்து பாதியும் என இவரது பயணம் சென்னையில் இருக்கும் இவருடைய சில நண்பர்களை நோக்கியதாகத் தொடங்குகிறது. வழியில் திண்டிவனம் ரயில் நிலையத்தில் இரவைக் கழிக்கும்போது தன்னிடம் திருட முயற்சித்த ஒரு பகுதிநேரத் திருடர் இவருக்கு நண்பராகிறார். அவர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பிள்ளையார் கோயிலில் – ஒரு பிக்பாக்கெட்காரர், சில பிச்சைக்காரர்கள், சில நெடுஞ்சாலை பாலியல் தொழிலாளர்களுடன் தங்கியிருக்கிறார். அவர்களுடன் இவரும் சிலநாட்கள் தங்கியிருக்கிறார். பின்னர் பகுதிநேரத் திருடர் மூலமாக மயிலாப்பூரில் ப்ளாட் கட்டுமிடத்தில் ஒரு வருடத்திற்குக் கட்டுமானத் தொழிலில் ஈடுபடுகிறார். ப்ளாட் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இவர் மிகவும் பலகீனமானவராக ஆகிவிட, மீண்டும், பகுதிநேரத் திருடரான திண்டிவனம் நண்பர் மூலமாக அடுத்ததாக லாரிக்கம்பெனி ஒன்றில் கிளீனராகப் பணியில் சேர்த்துவிடப்படுகிறார். அங்கும் பசி, பட்டினி, கேவலப்படுதல் இப்படியான இம்சைகளைத் தாங்க முடியாமல் லாரியில் இருந்து குதித்துத் தப்பித்து மீண்டும் திண்டிவனம் வருகிறார். திண்டிவனம் நண்பர் இவரை அவருடைய சொந்த ஊரில் தென்னந்தோப்புக் காவலராகவும், விளைநிலங்களுக்கு உரம் வைத்து பூச்சிக் கொல்லி அடிப்பவராகவும் இருக்கும் ஒருவரின் வீட்டில் அவருடைய உதவியாளராகத் தங்க வைக்கிறார். அவருடைய பசுமாடுகள் இரண்டையும் மேய்க்கும் வேலை இவருக்கு. இடையில் திடீரென ஒருநாள் திண்டிவனம் நண்பர் வந்து தான் இன்னும் இரண்டு வாரங்களில் ஜெயிலுக்குப் போக இருப்பதால், சம்பந்தப்பட்டவர் என இவரும் கைது செய்யப்படலாம் என்பதால் கிராமத்தை விட்டுப் போய்விடச் சொல்கிறார். அடுத்த பயணமாக கொடைக்கானல் வந்து சேர்கிறார். அங்கு மலைமேல் மழைக் காலத்தில் மட்டும் விவசாயம் செய்து, கோடைக் காலத்தில் சமவெளியில் கூலி வேலைசெய்யும் மலைவாழ் மக்களுடன் ஆறுமாதங்கள் தன்னுடைய காலத்தைக் கழிக்கிறார்.

இதற்கிடையில் படித்து முடித்த புத்தகங்கள் இவரை காலத்தால் பின்தங்கியவனாக அடையாளம் காட்டுகின்றன. ‘பின்நவீனத்துவ மனிதன் என்பவன் லட்சியம், தியாகம், அர்ப்பண உணர்வு, விசுவாசம் சார்ந்த களப்பணியிலிருந்து வெகுவாக நகர்ந்து போய்விட்டிருப்பதாகவும்; கண் முன் நடப்பவை மட்டுமல்ல, கடந்த காலங்களில் நடந்தவையும் பின்நவீனத்துவ மனிதனின் சிந்தனையை வடிவமைக்கக் கூடியவையாக இருக்கின்றன‘ என உணர்ந்து கொள்கிறார். பின்னர் அவரும் ‘பின்நவீனத்துவப் பிரஜை‘ ஆகிறார் என நாம் கொள்ளலாம்.

பின்நவீனத்துவ மனிதனான பின்னர் – “அடிப்படை உரிமைகளாக எதைக் கொள்ள வேண்டும் என்பது பற்றிப் பாதிக்கப்பட்டவர்களால் தீர்மானிக்க முடியாது. அவர்கள் நலன் சார்ந்து சிந்திக்கும் நபர்களால் மட்டுமே அது முடியும். அதேசமயம் அவர்கள் மிகுந்த போர்க்குணத்துடன் முடிவுகளை முன்வைக்கும்போது நடைமுறையில் எதிர்பார்க்கும் விளைவுகள் ஏற்படாமல் போகும் வாய்ப்பே இருக்கிறது. இந்நிலையில் இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு இணக்கமான பொதுவான அடிப்படை உரிமைகள், வழிமுறைகள் சார்ந்த திட்டங்கள் கண்டடைய வேண்டும். இதைப் போர்க்குணத்தை மட்டுப்படுத்தும் தந்திரம் என்று சொல்வதைவிட நடைமுறையைக் கணக்கில் எடுத்துக் கொண்ட செயல் திட்டம் என்றே சொல்ல வேண்டும்” என்று பின்நவீனத்துவ நடிகர் தசாவதாரம் கமலஹாசன் போல யோசிக்கிறார்.

மேலும், “ஒவ்வொரு இடத்திலும் வாழ்க்கை ஒவ்வொரு விதமானதாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட விதமான வாழ்க்கை முறையை, வசதி வாய்ப்புகளை எல்லோருக்கும் பொதுவானதாக ஆக்குவது சாத்தியமில்லை, ஒருவகையில் அது தேவையும் இல்லை. எத்தனை முறை சூரியன் மறைந்திருக்கிறததோ அத்தனை முறை அது உதித்தும் இருக்கிறது; யார் கண்ணுக்கும் தெரியாமல் இல்லை நிலாக்கள் என்பது போன்ற கூற்றுக்களில் உண்மை இருக்கிறது, என்றாலும் நிலைமை இப்படியே தொடரலாம் என்ற முடிவுக்கு மனதைக் கொண்டு சென்றுவிடக்கூடாது என்றும் தோன்றியது” என்றெல்லாம் யோசிக்கிறார். இச்சிந்தனைகள் சார்ந்து செயல்பட வேண்டும் என்று மனதில் முடிவெடுத்துக் கொள்கிறார். அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மன உளைச்சலின்றிப் பணி புரிய ஓர் இடத்தைத் தேடி நகர்ந்ததில் ‘காலச்சுவடு’ அலுவலகத்தில் சேர வாய்ப்புக் கிடைக்கிறது. சேர்கிறார்.

மூன்று பகுதிகளாக எழுதப்பட்ட இந்த தன்னனுபவப் பதிவில் முதல் பகுதியிலேயே எல்லாவற்றையும் சுருக்கமாகச் சொல்லிய பின்னர், இரண்டாம் பகுதி விவேகானந்த கேந்திர அனுபவங்களையும், மூன்றாம் பகுதி அரவிந்த ஆஸ்ரம அனுபவங்களையும் முன்வைக்கையில் வார்த்தைகள், வாக்கியங்கள் மாறாமல் பல இடங்கள் திரும்பச் சொல்லப்படுகின்றன. தவிர்த்திருக்கலாம். எள்ளலுக்கான முயற்சி தெரிகிறது. ஆனால் அவருடைய கல்வித்துறை முயற்சியைப் போலவே அது வேறு எங்கோ சென்று விடுகிறது. அதையும் தாண்டி சில விஷயங்கள் எள்ளல் தன்மையும் வந்ததற்குக் காரணம் அவர் உணர்ந்து நொந்த அங்கதங்கள் அவை. எடுத்துக்காட்டாக அருணாசலப் பிரதேசத்தில் நடந்த ஒரு கலந்துரையாடலையும், கன்னியாகுமரியில் நடந்த ஒரு கலந்துரையாடலையும் சொல்லலாம்.

இப்படியாக ஒரு மனிதன் தன் வாழ்வின் முக்கியமான காலகட்டமான இளமைப்பருவத் தேடலில் கிடைத்த அனுபவங்களாக இவை ‘புல்வெளியைத் தேடி என்ற பெயரில் நம்மை வந்து சேர்ந்திருக்கின்றன’ சரி இந்த அனுபவப் பகிர்வின் வழியாக நமக்கு என்ன சொல்ல வருகிறார். அது அவருக்கே தெரியாது. நிறுவன ஒழுங்கில் சுய சிந்தனை கொண்ட மனிதன் நிற்க முடியுமா எனக் கேட்க வருகிறாரா? இருக்கலாம். ஆனால், பதிவுகள் முழுவதும் நிறுவன ஒழுங்குகள் பற்றியதல்ல. என்றால் இந்தப் பதிவுகள் பயனற்றதா?

சரியாக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை, புங்குடுத் தீவு, மூலிகை வெளியீடாக  வெளியான கே.டேனியலின் ‘என்கதை’ என்ற நூலில் அவர் தான் எழுதுகின்ற விஷயங்கள் எவை என்பது பற்றிப் பகிர்ந்து கொள்வார். “சமூகத்தில் பல உண்மைகள் அன்றாடம் நடக்கின்றன. அந்த உண்மைகள் எல்லாவற்றையும் எழுத்தில் கொடுத்துவிட வேண்டுமா? என்ற கேள்வி இயல்பாகவே உங்கள் மனதில் எழ வாய்ப்பிருக்கிறது. இதற்கு நான் ஒரு வரையறை வைத்திருக்கிறேன். அது, தனி மனிதனும், அவனுக்கூடாக அவன் வாழும் சமூகத்தினதும் அல்லது அதற்கு மேலாக முழு உலகத்தினதும் பொதுவான மானசீக உணர்வினை லேசாகவேனும் தட்டிவிடக் கூடிய நாதக்கூர்களைக் கொண்டவைகளாக எவை எனக்குப்படுகிறதோ அவற்றை மட்டுமே எழுத்துருவில் வடிப்பது என்பதாகும்”

டேனியலின் வரையறைப்படி ‘பொதுவான மானசீக உணர்வினை லேசாகவேனும் தட்டிவிடக் கூடிய நாதக்கூர்களைக் கொண்டவைகளாக’ அவருடைய அனுபவங்கள் இருக்கின்றன. நூலின் எந்த இடத்திலும் காலம் சுட்டப்படவில்லை என்பதால், இவருக்கு இதுவெல்லாம் நடந்தபோது, சமூகத்தில் என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை நம்மால் அறிய முடியவில்லை. இந்தச் சிறு நூலை முடித்தவுடன் எனக்குள் எழுந்த கேள்வி டோட்டோசானுக்கு என்ன ஆயிற்று என்பதுதான். தெரிந்த விடைதான்.

‘செயல்பாடற்ற தத்துவம் வறட்டுத்தனம். தத்துவமற்ற செய்பாடு மலட்டுத்தனம்’ என்பார் மாவே. இங்கு B.R.மகாதேவன் தனக்கான தன்விருப்பம் சார்ந்த செயல்திட்டத்தை வைத்திருந்தார். அதற்கான செயல்பாடுகளை நோக்கி அவர் நகர முயற்சிக்கையிலெல்லாம் அங்குள்ள சூழல் தீர்மானிக்கின்ற வேறொரு தன்விருப்ப செயல்பாட்டை நோக்கி தானே நகர்ந்துவிடுகிறார். மேலும் இனக்கவர்ச்சிக்கு இவர் ஆளாகிறார் என்பது உள்ளூரில் இரண்டாம் வீட்டுப் பெண், அருணாசலப் பிரதேசத்தில் பழங்குடியினப் பெண், லாரி கிளீனராக இருக்கும்போது நெடுஞ்சாலை பெண்களிடம் வண்டியை நிறுத்தாத டிரைவரைப்பற்றிய வருத்தம், கொடைக்கானலில் இரவு வேட்டை தொடர்பான பதிவுகள் வழியாக நமக்கும் தெரிகின்றன. ‘எதிர்பால் கவர்ச்சி என்பது இயற்கை என்பதைத் தாண்டி, அதனைக் கடந்து மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கான நிர்பந்தம் இல்லாத சூழலில் தோன்றுவது.‘ அப்படியான பொழுதுகளை லாவகமாகக் கடப்பதற்கு ஒரு சிந்தனை முறை அவசியத் தேவை. அப்படியான சிந்தனை முறையை அவரவர் கொண்டிருக்கும் திசைவழியே தரவல்லது. தனிநபரின், அமைப்பின், நிறுவனத்தின்… திசைவழியைத் தீர்மானிப்பது தத்துவமன்றி வேறென்ன. இங்கே B.R.மகாதேவன் தனக்கான செயல் திட்டங்களைக் முடிவுசெய்கிறார். ஆனால் ஏன் என்பதற்கான அழுத்தமான காரணங்கள் இல்லாமல் ஒற்றைப் புத்தகத்தைப் படித்துவிட்டு அதுவே சரியென முடிவுசெய்யும் பொதுப்புத்திக்கும், கடைசியாகப் படித்த புத்தகத்தின் தாக்கத்திற்கு உட்படும் அதிபொதுபுத்திக்கும் ஆளாகிறார். கொஞ்சம் நிறையப் படித்ததாக நினைத்தவுடன், தன்னைத்தானே பின்நவீனத்துவ மனிதனாக உணர்கிறார். இவருடைய இத்தனை குளறுபடிகளுக்கும் காரணம் தத்துவமற்ற செயல்பாடுதான். அதை அவருடைய வார்த்தைகளிலேயே பக்கம் 10ல் இப்படிச் சொல்கிறார்.

‘‘என் வாழ்க்கையை இப்போது திரும்பிப் பார்க்கும்போது, ஒரு குறிப்பிட்ட கரையை நோக்கி நீந்த ஆரம்பிக்கும் நான் ஆற்றின் போக்கில் இழுத்துச் செல்லப்பட்டு வேறு கரைக்கு ஒதுக்கப்பட்டதாக உணருகிறேன்’

நிறையக் கேள்விகளை வாசிப்பவர்களுக்குள் எழுப்பக்கூடிய நூல் என்கிற வகையில் இதனை, எதையாவது சாதிக்க வேண்டும என நினைப்பவர்கள் நிச்சயம் படிக்க வேண்டும்

*

புல்வெளியைத் தேடி… – சுய அனுபவப் பதிவுகள்

B.R. மகாதேவன், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் – 629 001

***

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s