Home

கட்டுரை – கரிசல் வட்டார இலக்கியம்

சிபிச்செல்வன்

 

 

 

 

 

கரிசல் வட்டார இலக்கியம் எழுதுபவராகவே சோ. தர்மன் அறிமுகமானார். அவருடைய எழுத்துகள் ‘முன்னத்தி ஏரில்’ தொடங்கியவை. அவரது ஆரம்ப கால எழுத்துகளில் கி.ரா., பூமணி ஆகியோரின் தாக்கமும், சாயலும் இருந்திருக்கின்றன. அவரது சிறுகதைகளில் வருகிற கதாபாத்திரங்கள் எளிமையானவை; இயல்பானவை; பாசாங்குளற்றவை. அவரது கதைகளும், கதா பாத்திரங்களும், கதைக்களனும் வாசகர்களின் பொது அனுபவங் களுக்கு மிக நெருக்கமானவை.
சோ. தர்மனின் ஆரம்ப காலச் சிறுகதைகள் தாமரை போன்ற இதழ்களில் வெளியானவை. வாசிப்பிற்கு சிரமம் கொடுக்காமல் எளிதில் புரிந்துவிடக் கூடியவை. அதனாலேயே அவை ஒற்றைத் தளத்தில் நின்றுவிட்டதும் நேர்ந்திருக்கின்றன. இருந்தபோதிலும் இந்தக் கதைகளைக்கூட மோசமானவை என நிராகரித்துவிட முடியாது. ஏனெனில் அந்தக் கதைகள் வலிந்து எழுதப்பட்டவையல்ல.
சோ. தர்மனின் பாத்திரங்கள் ‘கரிசல்’ மண்ணின் அசலான மனிதர்கள். அவர்கள் மேனியில் கரிசல் மண் படிந்திருக்கும் அல்லது கந்தகம் படிந்திருக்கும். தொடக்கத்தில் இந்த வாசனைகள் இல்லாத கதைகளே இல்லை. அதே சமயம், அவரது எந்தக் கதையிலும் கோஷங்கள் உரத்து ஒலிக்கவில்லை. மண் மீதும், மனிதர்கள் மீதும் அவருக்கு இருக்கும் அக்கறையும், பரிவும், ஈரமும் அவரது எழுத்தில் வெளிப்பட்டுள்ளன. அவர் சார்ந்திருந்த எந்த இயக்கத்தின் நிழலும் தம் சிறுகதைகளின் மீது பெரியளவில் படிந்துவிடாமல் ஜாக்கிரதையாக இருந்திருக்கிறார்.
மனிதர்கள்மீது பாசமும் அக்கறையும் உள்ள படைப்பாளியான இவருக்கு விலங்குகள், பறவைகள் மீதும் அதே அளவு அன்பு செலுத்த முடிகிறது. (அ)ஹிம்சை சிறுகதையில் இந்தத் தன்மைகள் வெளிப்பட்டிருக்கிறது. மனிதர்கள், குறிப்பாகக் கிராமத்து மனிதர்கள் விலங்குகளையோ, பறவைகளையோ வளர்ப்பதில் காட்டும் ஈடுபாடும், அக்கறையும் அபரிமிதமானவை. அவர்கள் தங்கள் குழந்தைகளைப் போலவே இவற்றைப் பாவிக்கிறார்கள். இவற்றை இழந்துவிட்டால் துடித்துப் போகிறார்கள். ‘மாடுகள்’ சிறுகதையில் வருகிற திருக்கோட்டித் தேவரின் மாடுகளோடு ‘தப்பி’ வந்த மாட்டை வளர்த்தற்கான கூலியைக்கூட இதைச் சொல்லியே மறுக்கிறார்.
தர்மனுக்குச் சுற்றுப்புறச் சூழல் மீது கவனமும், அக்கறையும் இருப்பதற்கான வெளிப்பாடுகளாக ‘சோகவனம், கழிவுகள்’ கதைகள் இருக்கின்றன. ஆலைகளின் கழிவுகள் இயற்கையை நாசம் செய்வதையும், போக்குவரத்து நவீன சாதனங்களின் இரைச்சலால் ‘சோகவனத்து கிளிகள்’ இயந்திர மொழியை உளறுவதும் சமூக அக்கறையுடன் பதிவு செய்துள்ளார்.
‘ம(னி)தம், சார்… போஸ்ட், சிதைவுகள், அப்பாவிகள்’ ஆகிய சிறுகதைகளில் சாதி, மதப் பிரச்சினைகளின் முகங்களையும், அதன் கோரத்தையும் காட்டியுள்ளார்.
நேரிடையான வாசிப்பிற்குகந்ததாகவே வெளிப்பட்டுவந்த சோ. தர்மனின் சிறுகதைகள் மெல்ல நகர்ந்து பூடகமாகவும், குறியீடு களாகவும் மாற ஆரம்பித்ததை ‘குறளி வித்தைக்காரன்’ சிறுகதை காட்டுகிறது. இந்தக் கதையில் அவர் உருவகிக்கும் பொம்மைகள் எவற்றையெல்லாம் குறிக்கின்றன என்பதை அறிய மண்டையை உடைத்துக் கொள்ளத் தேவையில்லை.
சமூகத்தில் உள்ள எல்லா விதமான அமைப்புகளையும், அவற்றில் உள்ள கோளாறுகளையும் பகடி செய்வதோடு, அவற்றின் விளைவுகள் சமூகத்தை எப்படிப் பாதிக்கிறது என்பதையும் இக்கதையில் காட்டியுள்ளார். இந்தப் பூடக கதையில் எந்த இயக்கத்தின்மீதும் விருப்பு, வெறுப்பின்றி இயல்பாக எழுதி யுள்ளமையே இக்கதையின் வெற்றிக்குக் காரணம். இக்கதைக்குமுன் இவர் எழுதிய சிறுகதை களிலிருந்து ஒரு முக்கியமான நகர்வை ‘குறளி வித்தைக்காரன்’ நிகழ்த்தியிருக்கிறது.
இத்தொகுப்பின் ஆகச் சிறந்த கதை ‘இரவின் மரணம்’. இந்தக் கதை ‘புதிய பார்வை’ இதழில் வந்தபோதே வாசித்தேன். பிறகு இரண்டு, மூன்று முறை படித்திருப்பேன். இப்போது மறுபடியும் இத்தொகுப்பில் சேர்ப்பதற்காகவும் பலமுறை வாசித்த போதும் சலிப்போ, அலுப்போ தரவில்லை. இக்கதை பிரசுரமான போது நானும், சில நண்பர்களும் கூடி இக்கதையைத் தீவிரமாக அலசி விவாதம் செய்தோம். கவிஞர் சி.மணி கூட ‘புதிய பார்வை’ இதழுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அவர் அவ்வளவு சீக்கிரமாக ஒரு கடிதத்தை மனமுவந்து எழுதிவிடக் கூடியவரல்ல.
ஒரு நல்ல கதையின் இயல்பு & அது வேறு பிரதேசங்களில் வாழ்பவர்களின் அனுபவங்களோடும், அக்கதையின் அனுபவங் களோடு பொருந்திப் போகச் செய்வதுதான். அந்த வேலையை ‘இரவின் மரணம்’ கதை செய்திருக்கிறது. பாலிசு பேசுகிற தத்துவங்கள் வெகு யதார்த்தமானவை. அவை நூல்களின் பக்கங்களிலிருந்து பெறப்பட்டவையல்ல. மாறாக, அனுபவ அறிவிலிருந்து பெறப் பட்டவை. பாலிசு பேசும் வட்டார மொழியிலேயே அவை வெளிப் பட்டுள்ளன. அவையெல்லாம் தத்துவங்கள் தானா என்பதைக்கூட அவன் அறிவானா என்பதும் நமக்குள் எழுகிற கேள்விகள்.
சோ. தர்மனின் சிறுகதைகளில் ‘பன்முறை’ வாசிப்பனுபவத்திற்கு உட்படுத்திய முதல் சிறுகதை ‘இரவின் மரணம்’. இந்தக் கதைக்குப் பிறகு அவர் எழுதிய கதைகளில் உள்ளடக்கத்திலும், வெளிப் பாடுகளிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதைக் காணலாம்.
‘ஊழ்’ கதையும் குறிப்பிடத் தகுந்த கதைகளில் ஒன்று, இக்கதையில் வரும் ‘கூகை’ தெய்வத்தின் வழிபாடு, அது கொடுக்கும் அனுபவங்கள் ஆகியவை இக்கதையையும் நல்ல கதைகளின் பட்டியலில் சேர்க்கப் பரிந்துரை செய்கின்றன. இந்த ‘ஊழ்’ சிறுகதை ‘கூகை’ நாவலை எழுதவும், அதன் வெற்றியில் பங்கு செலுத்தவும் முடிந்திருக்கிறது.
‘அன்பின் சிப்பி’ கதையில் தேவதச்சன் என்ற நிஜமனிதரைப் புனைவாக மாற்றி, மருதுவின் சரித்திரத்தையும் இணைத்து புனைகதை வெளியில் பதித்துள்ளமை இவரின் பிறகதைகளிலிருந்து வித்தியாசப் படுத்துகிறது. நம் மண்ணில் உள்ள பாட்டி கதைகளும் மரபு முறைகளும் மரணத்திலிருந்துகூடக் காப்பாற்றும் என்பதைச் சொல்லும் கதை ‘மருந்து’. நவீன மருத்துவமும், மருந்துகளும் செய்யாத சாதனைகளை ‘கதை சொல்லி’ சாதிக்க முடியும் என்பதைக் காட்டுகிறார் சோ. தர்மன்.
சோ. தர்மனின் சிறுகதைகள் எந்த நவீனத்துவ ‘இஸங்களிலும்’ பாதிக்கப்பட்டு எழுதப்பட்டவை அல்ல. மாறாக, அவர் தன் வாழ் விலிருந்தே தனக்கான கதை கருக்களைத் தேர்ந்து கொள்கிறார். தான் சார்ந்திருந்த எந்த இயக்கங்களின் சாயல்களோ, கோஷங்களோ தன் எழுத்துகளின் மீது விழாமல் பார்த்துக் கொண்டிருப்பதே இவரின் தனித்தன்மை.
1960 & 2010 வரையிலான ஐம்பது வருட சமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வுகளின் (ஷிஷீநீவீஷீ – ணிநீஷீஸீஷீனீவீநீணீறீ ணீஸீபீ றிஷீறீவீtவீநீணீறீ பிவீstஷீக்ஷீஹ்) வரலாற்றுப் பதிவுகளின் சுவடுகளை சோ. தர்மனின் இந்த மொத்த சிறுகதைகளின் வழியாக அறிய முடிகின்றன. 1960களில் உருளைகுடி கிராமத்தின் பதிவுகளாகத் தன் இளமைக்கால விவசாய பாரம்பர்யத்தையும், கிராம ஆதி சமூகத்தின் மரபார்ந்த அறத்தையும், நம்பிக்கைகளையும், தொன்மங்களையும் தன் சிறுகதைகளில் எழுதியுள்ளார்.
ஒரு கூத்துக் கலைஞனின் மகனாக சோ. தர்மன் இருப்பதன் பாரம்பர்யத்தையும், அந்த அனுபவ வீச்சாக கதைகளில் மிளிரும் அனுபவங்களும் வாசகர்களுக்கு நெருக்கத்தைத் தருகின்றன.
உருளைக்குடியிலிருந்து கோவில்பட்டிக்கு சோ. தர்மனின் குடும்பம் குடிபெயர்ந்த பிறகு, அவரின் சிறுகதைகளிலும் கதைக்களனிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளமை காணலாம். தீப்பெட்டித் தொழிற் சாலைகள், பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் உதிரித் தொழிலாளிகள், குறிப்பாகக் குழந்தை தொழிலாளிகள், பெண் தொழிலாளிகள் இவர்களின் ஒரு நாள் அல்லது ஒவ்வொரு நாளின் அல்லது ஒரு வேளை சோற்றுக்காகப் படும் அல்லல்கள் கதை களாகியுள்ளன.
விவசாய வருமானத்திலிருந்து தினசரி உதிரிகளின் பொருளாதார தேவைகளை நோக்கி கதைகளும், கதைக்களனும் நகர்வதை ஒட்டுமொத்த சமூகத்தின் போக்குகளுக்கான மாதிரிகளாக அடையாளம் காண சோ. தர்மனின் கதைகள் உதவுகின்றன.
உருளைகுடி, கோவில்பட்டி, சிவகாசி அனுபவங்களின் அடுத்த கட்ட நகர்வாகப் புனைவுகளின் சாரத்தையும், சிறுகதைகள் எழுதித் தேர்ந்த தொழில் நுட்ப பயிற்சியும், மனமும் நுகர்வுக் கலாச்சார வீழ்ச்சியையும், விளைவுகளையும், கழிவுகளையும் அதன் பாதிப்பு களையும் பகடி செய்யவும், கவலையோடும், அக்கறையோடும் சோ. தர்மன் அணுகி நகர்ந்துள்ளமை தெரிகிறது.
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இறந்தவர்களின் வரலாற்றுப் புனைவுதான் ‘நீர்ப்பழி’ சிறுகதையாக உருமாற்றுகிறார். 80களின் பிற்பகுதியில் அறிமுகமான தொலைக்காட்சி மூன்று சிறுகதைகளில் போகிற போக்கில் சொல்லிச் சென்றாலும், அது பயன்படுகிற, விதத்தின்மீது அவரின் விமர்சனத்தையும் ‘சட்டிலாக’ (ஷிuதீtறீமீ) கூறுகிறார். குழந்தைகளின் மீது பாலியல் வன்முறை நிகழ்த்து பவர்கள், நீலப்படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சியாக ‘வலைகள்’ கதையின் வழியே காட்டுகிறார்.
அறம், ஈரம் இவையிரண்டும் கிராம வாழ்வின் இரண்டு ஆதி சமூக அடையாளங்கள். இந்த இரண்டின் அடிப்படைகள்தான் சோ.தர்மனின் கதைகளில் பரவிக் கிடக்கின்றன. பின்னால் எழுதப் பட்டுள்ள கதைகளில் சமூக வளர்ச்சியின் அடையாளங்களாக நுகர்வு கலாச்சாரமும், பொருளாதார வளர்ச்சியின் விளைவுகளாக விவீநீக்ஷீஷீ குடும்பங்களும் உருவானதாலும் அறமும், ஈரமும் நைந்து தான், தனது என்ற குறுகிய மனப்பான்மைகளும் உருவாகி யுள்ளமைக்கான கால, பண்பாட்டு மாற்றங்களின் சுவடுகளை தர்மனின் கதைகளின் வழியாக அறிய முடிகிறது.
மௌனங்களும், இடை வெளிகளும் சிறுகதைகளின் முடிவில் வாசகன் எதிர்கொள்ளும் அழுத்தங்களும், கண்ணில் ஈரம் கசிவதை உணரும் தருணங்களும், மனிதர்களுக்கு இருக்கும்வரை
சோ. தர்மனின் கதைகள் உயிர் வாழும்.
நமது ஈரத்தை உணர்ந்து கொள்ளவும், தக்க வைத்துக் கொள்ளவும் மீண்டும் மீண்டும் சோ. தர்மனின் கதைகளை வாசிப்பதன் வழியாக மீட்டுக் கொள்ள முடியும். அந்த அனுபவங்கள் உங்களுக்கும் கிட்டும்படியான மொத்த சிறுகதைகளின் தொகுப்புதான் இந்நூல், காங்கீரிட் காடுகளில், கணினி, இயந்திர வாழ்வின் நுகர்வு கலாச்சாரத்திலிருந்தும் உங்களை விடுவிக்கவும், உங்கள் நெஞ்சில் காய்ந்திருக்கும் ஈரத்தைச் சுரக்கச் செய்யும் இச்சிறுகதைகளைப் படிக்க பரிந்துரை செய்கிறேன்.
22.12.2010 சிபிச்செல்வன்
சேலம்

Advertisements

One thought on “கட்டுரை – கரிசல் வட்டார இலக்கியம்

  1. சோ.தர்மனின் எழுத்துகள் குறித்த அருமையான பதிவு. கந்தகபூமியின் மனிதர்களை குறித்த சிறுகதைத்தொகுப்பான ச.தமிழ்ச்செல்வனின் ”மிதமான காற்றும் இசைவான கடலலையும்” தொகுப்பு வாசித்திருக்கிறேன். தங்கள் பதிவை வாசித்ததும் சோ.தர்மனின் எழுத்துகளை வாசிக்க ஆர்வமாயிருக்கிறேன். பகிர்விற்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s