Home

 

பத்தி எழுத்து புதுக்குரல்கள்

 

 

தற்கொலைக்குத் துண்டும் கவிதைகள்

சிபிச்செல்வன்

 

 

 

 

 

 

 

 

 

கடந்த இரண்டு நாளாக மனதைத் தொந்தரவு செய்கிற ஒரு விஷயத்தை என்ன செய்வது எனத் தெரியாமல் இந்தக் கட்டுரை எழுதியாவது தப்பித்துக்கொள்ள நினைத்துதான் எழுதத் தொடங்கியுள்ளேன்.

ஒரு பிரபலமான எழுத்தாளரை மலைகள் இதழுக்கு ஒரு சிறுகதை அல்லது ஒரு கட்டுரை  கேட்டுத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவர் சொன்னார். தன்னிடம் கவிதைகள்தான் இருக்கிறது உடனே அனுப்பிவைக்கவா என்றார்.  இல்லை நீங்கள் ஒரு சிறுகதையை அனுப்புங்கள் என்றேன். அதற்கு அவர் சொன்னார். கவிதை எழுதுவதுதான் எளிதானது. உரைநடை எழுதுவது மிகவும் கடினமானது. நினைத்தபோது எழுதி தரமுடியாது என்றார். நான் சிரித்தேன்.

இரண்டு நாளுக்குப் பின் வேறு ஒரு எழுத்தாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபோதும் கிட்டதட்ட அவரும் கவிதை எழுதுவதுதான் எளிதானது. நினைத்தபோது எழுதிக் கொடுக்க முடியும் என்றார். உரைநடை எழுதுவதுதான் சிரமம். அதனால் பொறுமையாக எழுதும்போது கொடுப்பதாகவும் சொன்னார்.

எனக்கு இந்த இரண்டு எழுத்தாளர்கள் சொன்னதும் சரியெனப் படவில்லை. ஏனெனில் நான் கவிதைகள் மட்டும் எழுதுபவன். இருப்பதிலியே கடினமானது நல்ல கவிதை எழுதுவதுதான் என்பது என் நினைப்பு. இது ஒரு பக்க சார்பு நிலை கொண்டதோ என்ற சுய விமர்சனமும் எனக்குள் உண்டு. ஆனால் நண்பர்களின் நினைப்பு தவறு எனச் சொல்ல ஒரு உதாரணமாக வந்த விஷயத்தைதான் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

மதுக்குவளை மலர் என்ற கவிதை தொகுதியை வே.பாபு என்ற இளங்கவிஞர் என் வீட்டுக்குத்  தேடிவந்து கொடுத்து விட்டு போனார். உடனே அதை வாசித்தேன். வாசித்த உடன் கொஞ்சம் மனம் குழம்பியது. எல்லாக் கவிதைகளும் ஒரு போதை மனநிலையில் எழுதப்பட்ட கவிதைகள். ஒரே மனநிலையில் எழுதப்பட்ட கவிதைகள் போன்ற தொனியில் எழுதப்பட்டுள்ளன.

எல்லாக் கவிதைகளும் அம்மு என்ற குள்ளிக்கு எழுதப்பட்ட கவிதைகள்தான்.  எல்லாக் கவிதைகளும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்டவைகள்தான். ஆனால் ஒரே மனநிலையில் எழுதப்பட்டவைகள். எல்லாமே தற்கொலைக்கான மனநிலையில் தோல்வியடைந்த காதலனின் பார்வையில் புலம்பி எழுதப்பட்ட கவிதைகள்தான்.

புலம்பல் கவிதைகள் என்றால் அவை வெற்றுப் புலம்பல் என்றால் நான் அதைப் பொருட்படுத்தப்போவதில்லை. பிறகு வேறு எதற்காக இந்தப் புலம்பலைப் பொருட்படுத்தி இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். எல்லாப் புலம்பல்களும் கவிதைகள் அல்ல. அதே போலக் காதலில் தோற்ற எல்லாக் கவிகளின் புலம்பல்களும் கவிதைகள் அல்ல. ஆனால் இந்த மதுக்குவளை மலர் கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளை வாசிக்கிற போது வாசகனின் மனநிலையில் இக்கவிதைகள் பெரும்பாதிப்பைச் செலுத்தி வாசகனையும் தற்கொலைக்குத் துண்டும்படியாக அமைந்துள்ளன.

கவிதைகள் எழுதியவனின் மனநிலையைத் துண்டும்படியான கவிதைகள் நிச்சயம் நல்ல கவிதைகளாகதான் நினைக்கிறேன். அதனால்தான் இக்கவிதைகளைப் பொருட்படுத்தி எழுதத் தொடங்கினேன்.

வே.பாபு என்ற இந்தக் கவிஞரின் மதுக்குவளை மலர் என்ற கவிதை ஒரு இலக்கியச் சிற்றேட்டில் வெளிவந்த நாள் என்னைச் சந்தித்து ஒரு இதழைக் கொடுத்தார் வே.பாபு. நான் அந்த இதழில் வெளியாகியிருந்த மதுக்குவளை மலர் என்ற கவிதையை வாசித்ததும் மகிழ்ந்து அவரைப் பாராட்டினேன்.அவரால் நிச்சயமாக நம்ப முடியவில்லை. நான் அவருடைய கவிதையைப் பாராட்டுவது அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் கடந்த பதினைந்து வருடங்களாக அவர் தொடர்ந்து எதையாவது எழுதிக்கொண்டிருந்தார். அவற்றில் பெரும்பாலானவை வெகுசன இதழ்களில் வாசகர் கடிதங்கள் அல்லது அங்கே இங்கே எனச் சில கவிதை மாதிரி தோற்றத்தில்  .

சேலம் பகுதியில் சில நண்பர்களோடு சில கூட்டங்கள் நடத்துவது இப்படியாக அவருடைய செயல்பாடுகள் இருந்தன.அவருடைய எந்த செயல்பாடுகளும் எனக்கு நம்பிக்கையூட்டும்படியாக இருந்ததில்லை. அவர் கவிதைகளை நான் பொருட்படுத்தியதும் இல்லை. அதற்கான சந்தர்ப்பங்களும் கவிதைக்குள் நேரவில்லை.ஆனால் தொடர்ந்து அவரின் செயல்பாடுகள் மெல்ல மெல்ல தீவிர இலக்கியத்தின் பக்கம் திரும்பியது என்பதைக் கொஞ்ச நாளாகக் கவனித்து வந்தேன். தக்கை என ஒரு சிற்றேடு தொடங்கினார். அதில் கொஞ்சம் நம்பிகையூட்டும் விதமான நடவடிக்கைகள் தெரிந்தன.

இடையில் அவருடைய தனிப்பட்ட வாழ்வில் சில நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன என்பதை மதுக்குவளை மலர் என்ற கவிதை தொகுதியின் வழியாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. அவர் யாரையோ காதலித்துள்ளார் என்பதுதான் அது. அது நிஜமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என வாதிட முடியும். அப்படி இருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை.ஆனால் கவிதைகளில் தெரிகிற வலியும் வேதனையும் அசலானவைகள். அதில் எந்தப் பாசாங்கும் இல்லை.

அசலான எந்த அனுபவங்களும் அதை வாசிக்கிற வாசகனிடத்தில் ஒரு வலியை ஏற்படுத்தும். அந்த வலியை , அந்த வேதனையை இந்த மதுக்குவளை மலர்  என்ற கவிதைத் தொகுதி ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் வாசிக்கிற வாசகனுக்கும் கவிஞரின் அனுபவங்கள் தரும் வேதனைகள்,வலிகள் அப்படியே வாசகனிடத்தில் கடத்தப்படுகிறது.அதனால்தான் இக்கவிதைகள் தற்கொலைக்கான மனநிலையைத் தருகிறது.

இந்த மதுக்குவளை மலர் என்ற கவிதை வெளியான இதழ் வரும்போது ஒரு விடுதியில் தங்கி தன் நண்பர்களுக்கு அந்தத் தகவலைச் சொல்லிக்கொண்டிருந்தார்.. இரண்டு நாள் கழிந்து மீண்டும் ஒரு தொலைபேசி அழைப்பு அவரிடமிருந்து எனக்கு வந்தது. அவரைப் போய்ப் பார்த்தேன். அவர் அந்தக் கவிதையை நண்பர்கள் எல்லோரும் பாரட்டிய மகிழ்ச்சியில் உற்சாகமாகவும் வலிகளோடும் வேதனைகளோடும் அந்த விடுதிலேயே தொடர்ந்து மூன்று நாளாகத் தங்கியிருந்தார் என்பதை அறிந்ததும் அவரின் வேறு சில நண்பர்களுக்குத் தொலைபேசியில் தகவல் சொல்லி வரவழைத்தேன்.

அவரின் தற்கொலை மனநிலையைச் சொல்லி அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யச் சொன்னேன். ஒரு வழியாக அப்போதைக்கு அதிலிருந்து மீண்டார்.

ஆனால் மதுக்குவளை மலர் என்ற தொகுதி வெளி வந்த பிறகுதான் தெரிகிறது. அவர் பூரணமாக அந்த மனநிலையிலிருந்து விலகவில்லை என்பது தெரிகிறது. இந்தத் தொகுதியில் இந்த மனநிலையிலிருந்து எழுதப்படாத சில கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. அவை பெரும்பாலும் அவரின் தொடக்க காலத்தில் எழுதப்பட்ட கவிதைகள் என்பது அதிலிருக்கிற பாசாங்குகளைப் பார்த்துச் சொல்ல முடிகிறது.அதில் வேறு யாருடைய அனுபவங்களோதான் எழுதப்பட்டுள்ளன. ஆகையால் அவற்றை எழுதியதால் அதில் ஒரு சொந்தமான அனுபவத்தின் சாயைகள் இல்லை என்பது தெரிகிறது.

ஆக ஒரே தொகுதியில் கவிதைகளும் , கவிதை போன்ற தோற்றம் கொடுக்கிற வடிவத்தில் அமைந்த பாசாங்களும் இடம்பெற்றுள்ளன. இப்படி கொடுத்திருப்பது ஒரு வகையில் நல்லதுதான் என்பது என் அபிப்பிராயம். கொஞ்சம் மோசமானவைகளைக் கொடுத்தால்தான் நல்லது எது என்பதை வாசகர்கள்,விமர்சகர்கள் பிரித்துத் தெரிந்து கொள்வார்கள்.. அதற்கான வாய்ப்பை மதுக்குவளை மலர் என்ற இந்தத் தொகுதியில் தந்துள்ளார் வே.பாபு.

இந்தத் தொகுதியை ஏன் கவனப்படுத்த நினைத்தேன் என்றால் மோசமான கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தவர், கொஞ்சம் கூட நம்பிக்கைகைத் தரும்படியான செயல்பாடுகளை வெகுநாட்களாகக் கொண்டிராதவர், கொஞ்ம் நம்பிக்கை ஊட்டுகிற விதமாகத் தமிழ் இலக்கியத்திற்கு , குறிப்பாகத் தமிழ்க் கவிதைக்கு நல்ல கவிதைகளைக் கொடுக்கிற விதமாக எழுதத் தொடங்கியிருப்பதை உற்சாகமாக வரவேற்கிற விதமாகதான் இக்கட்டுரை எழுத வேண்டும் என்ற மனநிலையைக் கொடுத்தது. ஆனால்  இப்படி நம்பிக்கை கொடுக்கிற கவிஞர்கள் பட்டியலில்  அவரைச் சேர்ப்பிக்க அவர் கொடுத்த விலை கொஞ்சம் அதிகம்தான். அது அவருடைய காதல். அது அவருடைய வாழ்க்கை. ஆம் நண்பர்களே இந்தக் கவிதைகளை எழுத இந்தக் கவிஞன் தன்னுடைய வாழ்வை , தன்னுடைய இளமையை, தன்னுடைய பொருளாதாரத்தை, தன்னுடைய செல்வ வளத்தைக் காவு கொடுத்துதான் இக்கவிதைகளை எழுதியிருக்கிறான். அதனால்தான் இக்கவிதைகள் நன்றாக இருப்பதாகப் படுகிறது. அதனால்தான் இக்கவிதைகளைப்பொருட்படுத்தி இக்கட்டுரையை எழுத வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நல்ல கவிதைகளை எழுத நல்ல அனுபவங்கள் வேண்டும். நல்ல அனுபவங்கள் அதாவது பிறரின் அனுபவங்களைப் பார்த்து அல்லது கற்பனையாக எதையாவது எழுத முடியாது. அதற்குத் தன் வாழ்வையே பலி கொடுக்க வேண்டும் என்பது மீண்டும் ஒரு முறை நீருபணமாகியுள்ளது.

இக்கவிதைகளை எழுதுவதற்காகத் தன் காதலை இழந்து, ,போதையின் உச்சத்தில் பிதற்றிக்கொண்டு தன் வாழ்வையே காவு கொடுத்துதான் இக்கவிதைகளை எழுதியுள்ளான் இக்கவிஞன். நான் பதினைந்து வருடங்களாகப் பொருட்படுத்தாமல் இருந்த ஒருவனைப் பொருட்படுத்த வைத்தவை இக்கவிதைகள். அதற்கு அவன் கொடுத்த விலை கொஞ்சம் நஞ்சமில்லை. ஆம் நண்பர்களே அவன் தன் வாழ்க்கையையே பலி கொடுத்து அந்த இரத்தத்தில்தான் இக்கவிதைகள் எழுதியிருக்கிறான்.

அதனால்தான் இந்தக் காதல் , இந்தப் போதை, இந்தப் பிதற்றல்,இந்த அரற்றல், இந்த இழப்பு, இந்தப் பைத்தியம் , இந்தக் கொடுமை, இந்த அழகான போதை, இந்த மதுச்சாலைகள், இந்தத் தங்கும் விடுதிகள் , இந்த ,,, இந்த இத்தியாதிகள் எல்லாம், கவிதைகளில் உள்ள அனுபவங்கள் யாவும் நம்முடையாதாக மாறி நம் நெஞ்சில் நல்ல கவிதைகள் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளன.

இப்போது சொல்லுங்கள் நண்பர்களே-,? கவிதை எழுதுவது அவ்வளவு எளிதானதா?……

•••

 

பத்தி எழுத்து புதுக்குரல்கள்

 எதுவரை இதழுக்காக

 நன்றி 

நண்பர் பௌசர் ( லண்டன் ) 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s